நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் இன்று காலை 9.30 மணி முதல் இரவு 9.30 வரை!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று காலை 9.30 மணி முதல் இரவு 9.30 வரை முழுநாள் விவாதம் நடைபெறுகிறது.
இந்த பிரேரணை மீதான விவாதத்துக்கு 12 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
பரபரப்பான சூழ்நிலையில் நடைபெறும் இந்த விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு இடம்பெறவிருப்பதோடு பாராளுமன்றத்திற்கு வருகை தரும் எம்.பிக்களில் பெரும்பான்மையானவர்களின் வாக்குகளுடன் பிரேரணை நிறைவேற்றப்படவோ தோற்கடிக்கப்படவோ​ இருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தினேஷ் குணவர்தன அடங்கலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் 21 ஆம் திகதி பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தனர்.
14 விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 55 உறுப்பினர்கள் கையொப்பமிட்டிருந்தனர். இதில் சு.க அமைச்சர்கள் நான்கு பேர் கையொப்பமிட்டிருந்தனர்.
பிரேரணையிலுள்ள 14 விடயங்களின் காரணமாக பிரதமர் பதவியிலும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியிலும் இருக்க முடியாது எனவும், அவர் பிரதமராக பதவி வகிக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிரேரணையை விவாதத்திற்கு எடுப்பது தொடர்பில் கட்சித் தலைவர் கூட்டம் நடத்தி ஆராயப்பட்டதோடு இதன்படி இன்று ஏப்ரல் 4 ஆம் திகதி விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
பிரேரணைக்கான திகதி முடிவு செய்யப்பட்ட நாள் முதல் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவும் ஆதரவாகும் பல்வேறு மட்டங்களில் பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டன.
பிரேரணையை ஆரம்பத்திலே அதனை ஆதரிப்பதாக ஒன்றிணைந்த எதிரணியும் மக்கள் விடுதலை முன்னணியும் அறிவித்திருந்ததோடு இதனை தோற்கடிப்பதாக ஐ.தே.க அறிவித்திருந்தது.
நல்லாட்சி அரசாங்கத்தில் ஐதே.கவின் பங்காளிக் கட்சிகள் இறுதிநேரம் வரை தமது முடிவை அறிவித்திருக்காத நிலையில் சுதந்திரக் கட்சியும்​ வெளிப்படையாக தமது முடிவை அறிவித்திருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமது முடிவை அறிவித்திருக்கவில்லை
இந்த நிலையில், கடந்த வாரமும் இந்த வாரமும் இலங்கை அரசியலில் மிகவும் பரபரப்பான வாரங்களாக அமைந்தன. பிரேரணைக்கு எதிராகவும் ஆதரவாகவும் கட்சிகளினதும் எம்.பிக்களினதும் ஆதரவை திரட்டும் முன்னெடுப்புகள் இரகசிய பேச்சுக்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றன.
பிரதமர் தலைமையில் ஐக்கிய தேசிய முன்னணி தலைவர்களின் கூட்டங்கள், ஐதே.க செயற்குழு மற்றும் பாராளுமன்ற குழுக் கூட்டங்கள் என்பனவும் மறுபுறத்தில் ஜனாதிபதியின் தலைமையில் சு.க அமைச்சர்களின் கூட்டங்கள் மற்றும் சு.க பாராளுமன்ற குழுக் கூட்டங்கள் என்பனவும் பல த டவைகள் இடம்பெற்றன.
அத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் ,மக்கள் காங்கிரஸ். தமிழ் முற்போக்கு கூட்டணி என்பவற்றின் கூட்டங்களும் தனித்தனியே நடந்தன. ஒன்றிணைந்த எதிரணியின் கூட்டங்களும் முன்னாள் ஜனாதிபதியின் தலைமையில் கூடியது. இந் நிலையில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் பிரேரணையை ஒன்றிணைந்து தோற்கடிக்க ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. அதேநேரம் ஜனாதிபதியின் தலைமையில் கூடிய சு.க பாராளுமன்ற கூட்டத்தில் பிரதமர் பதவி விலகவேண்டும் என தீர்மானம் செய்யப்பட்டது. இதனை பிரதமரை சந்தித்து அறிவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இது தவிர ஐ.தே.க அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலும் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலும் கூட முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன
நேற்றும் இறுதிக்கட்ட முக்கிய சந்திப்புகள், பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக நடைபெற்றதாக நம்பகரமாக அறிய வருகிறது.
இன்று காலை 9.30 முதல் இரவு 9.00 மணி வரை விவாதம் நடைபெற்ற பின்னர் 9.00 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற இருக்கிறது. மின்னணு வாக்கெடுப்பு முறையில் கோளாறு உள்ளதால் பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.