அரசியல் சுயதேவைக்காக வரலாற்றைப் பொய்யாக்குவது கண்டனத்துக்குரியது!

அனுராதபுரம் கரும்புலித் தாக்குதலில் - 22 ஒக்ரோபர் 2007 - வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் தாக்குதலான "எல்லாளன்" நடவடிக்கையை எந்தத் திரிபும் இல்லாமல் உள்ளது உள்ளபடியே வரலாறாக்க வேண்டும் என்பதற்காகவே திரு.சீமான் அவர்கள் தேசியத் தலைவரின் பணிப்புக்கு அமைய தமிழீழத்துக்கு அழைத்துவரப்பட்டார்.
அந்தப் படத்தில் நடித்தவர்கள் பெரும்பாலும் சிறப்பு அணியைச் சேர்ந்த முக்கிய போராளிகளும் சில தளபதிகளும் உள்ளடக்கம். அந்தப் படத்தை தேசியத் தலைவர் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அதில் தளபதிகளை ஈடுபடுத்தியதோடு, அந்தப் படத்தை எடுப்பதற்குப் பொருத்தமானவராக திரு.சீமான் அவர்களைத் தெரிவுசெய்தார்.
அந்தப் படத்தில் நடித்த அத்தனை பேரின் படங்களும் தேசியத் தலைவரிடம் காண்பிக்கப்பட்டு, அவர்களுடைய முக ஒற்றுமை அந்த 21 சிறப்புக் கரும்புலிகளின் முகத்தோடு ஓரளவுக்கேனும் பொருந்துகிறதா என்று சரிபார்த்து, தலைவரின் ஒப்புதல் பெற்றுத்தான் ஆட்தெரிவுகூட நடைபெற்றது.
அதில் சிலரை தலைவரே சிபாரிசு செய்துகொடுத்தார், குறிப்பாக வரைபடப் பிரிவு மற்றும் விசேட வேவுப் பிரிவுப் பொறுப்பாளர் பிரிகேடியர் சசிக்குமார் மாஸ்ரர் மற்றும் கேணல்.வசந்தன் மாஸ்ரர் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். அத்துடன், அதில் தமிழீழக் காவற்றுறையைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களும் இணைக்கப்பட்டனர்.
தலைவர் எதைச் செய்தாலும் தொலைநோக்குச் சிந்தனையுடன்தான் செய்திருக்கிறார் என்பது தமிழினத்துக்கே வெளிச்சம்.
இப்படிப்பட்ட மிக முக்கியத்துவம்வாய்ந்த ஒரு வரலாற்றுத் திரைப்படத்தை எடுப்பதற்காக தமிழ்நாட்டில் இருந்து திரு.சீமான் அவர்களை அழைத்திருந்த தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் 8 நிமிடங்கள் தான் அவரைச் சந்தித்தார் என வரலாற்றைப் பிழையாகப் பதிவிட முயற்சிப்பதை எவராலும் ஏற்க முடியாது.
''வெறும் 8 நிமிடங்கள் தான் சந்தித்தார், படங்கள் எதுவும் எடுக்கவில்லை. தேசியத் தலைவருடன் இருப்பது போன்ற படம் போலியானது''... என திரு.வைகோ அவர்கள் கூறியிருப்பதானது தங்களது சொந்த அரசியல் சுய நலனுக்காக வரலாற்றைப் பொய்யாகப் பதிவிடுவதற்கான முயற்சியாகும்!
தயவுசெய்து வரலாற்றைப் பிழையாகப் பதிவுசெய்ய முயற்சிக்கவும் வேண்டாம் இவ்வாறான முயற்சிகளுக்கு விலைபோகவும் வேண்டாம்!
Powered by Blogger.