இனத்தின் விடுதலையே குறிக்கோள்.!


"எமது இனத்தின் விடுதலை" என்ற ஒரே குறிக்கோளுக்காகப் பாடுபட்டுவரும் திரு.சீமானின் முயற்சிகளுக்கு உறுதுணை வழங்கவேண்டியது உலகத் தமிழர்களின் தார்மீகக் கடமை!

எமது அன்பான மக்களே!
ஏப்பிரல், மே 2009 இல், புலம்பெயர் நாடுகளில் தமிழ்மக்கள் இயல்பாகவே எவ்வாறு எழுச்சிபெற்று ஆர்ப்பரித்தார்களோ, அவ்வாறு அந்த எழுச்சி தொடர்ந்து நீடிக்க வேண்டும்; அந்த வெறித்தனமான எழுச்சி தொடர்ந்து தக்கவைக்கப்பட வேண்டும்.
அந்த வெறியோடு எமது இனத்திற்காக திரு.சீமான் அவர்கள் தொடர்ந்து ஓயாது உழைத்துவருகிறார். 2009 ஆம் ஆண்டு எமக்கு மிக முக்கியமான செய்தி/கடப்பாடு ஒன்று உணர்த்தப்பட்டது. அது என்னவென்றால், தமிழ் நாட்டில் மாபெரும் மாற்றம் நிகழ்ந்து, தமிழ்த்தேசியம் மிகப்பெரும் எழுச்சிகொள்ள வேண்டும் என்பது. 

அந்த கடப்பாட்டை/அவசியத்தை சரியாக உணர்ந்து, அறிவை ஆயுதமாகக் கொண்டு செயற்பட்டுவருபவர் திரு.சீமான் அவர்கள். 

"தமிழ் நாட்டில் மிகப்பெரும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு, அங்கே எட்டுக் கோடி தமிழர்கள் சார்பாகவும் உலகத் தமிழர்களின் நலன் சார்ந்தும் செயற்படக்கூடிய மற்றும் சர்வதேசத்துடன் தமிழ் மக்கள் நலன்சார்ந்து பொருளாதாரப்பலத்துடன் கூடிய இராசதந்திர நட்புறவுகளை வளர்க்கக்கூடிய ஒரு புரட்சிகரமான தலைமையுடன் கூடிய, சிறந்த ஆட்சி தமிழ்நாட்டில் அமைக்கப்பட வேண்டியது வரலாற்றுத் தேவை." 

அந்தப் புரட்சிகர மாற்றத்தை நிகழ்த்த அயராது உழைத்துவருபவர்கள் திரு.சீமான் அவர்களும் "நாம் தமிழர்" போராளிகளும். இந்த விடயத்தை அனைத்துத் தமிழர்களும் நன்கு புரிந்து செயற்பட வேண்டும். 

தமிழ் நாட்டில் அவ்வாறான ஒரு மாற்றத்தை நிகழ்த்தி, தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் தமிழ்நாட்டிலுமாக ஒன்றுபட்டு, ஒரு தேசமாக, ஒரே குரலாக 2009 ஏப்பிரல், மே மாதங்களில் நடந்தேறியதுபோன்ற இயல்பான மக்கள் எழுச்சியுடன் கூடிய, பொருளாதாரப் பலத்துடன்கூடிய, இராசதந்திர ஈடுபாட்டால் நாம் எமது தமிழீழத் தேசத்தை அமைப்பது சாத்தியப்படுத்தலாம். 

அதுமட்டுமன்றி, தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழர்கள் தன்மானத்தோடு சுதந்திரமாக, அடிமைத் தனத்தை ஒழித்து வாழமுடியும். இந்த விடயங்களை ஆழமாக உணர்ந்தே திரு.சீமான் அவர்கள் களத்தில் இறங்கி அயராது உழைத்துவருகிறார். இந்த மாபெரும் முயற்சிக்கு உலகத்தமிழர்கள் தங்கள் முழுமையான ஆதரவை வழங்கவேண்டியது மிகவும் தார்மீகக் கடமை.
"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

நன்றி.
அன்புடன்,
த.ஞா.கதிர்ச்செல்வன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.