அமெரிக்க ரஷ்யா இடையே போர் மூளும் அபாயம்!

சமீபத்தில் சிரியாவில் இருந்து இரசாயன ஆயுதங்களை அகற்றுவதற்கென அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் அடங்கிய கூட்டணிப் படைகள் சிரிய அரசுகு எதிராக டமஸ்கஸ் மீது வான் தாக்குதல் தொடுத்திருந்தன.

இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே போர் மூளுவதைத் தடுக்க ஐ.நா சபை அவசரமாகக் கூடியுள்ளது.
முன்னதாக சிரிய உள்நாட்டுப் போரில் சிரிய அரசுக்கு சார்பாக ரஷ்யாவும், ஈரானும் களத்தில் செயற்பட்டதால் அமெரிக்கக் கூட்டணி நாடுகளின் மீது அவை பதில் தாக்குதல் தொடுக்கும் பட்சத்தில் அது அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே போர் மூள வகுத்து விடும் என்று அஞ்சப் படுகின்றது.


இதன் காரணத்தினால் ரஷ்யாவின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா பாதுகாப்பு சபை அவசரமாக சனிக்கிழமை அவசரமாகக் கூடியிருந்தது. இக்கூட்டத்தில் சிரியா மீதான தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும் என்றும் மேற்கொண்டு தாக்குதல் நடத்தக் கூடாது என்றும் ரஷ்யா தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு ஆதரவாக சீனாவும், பொலிவியாவும் வாக்களித்தன. எதிர்த்து அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், நெதர்லாந்து, சுவீடன், குவைத், போலந்து, ஐவரி கோஸ்ட் ஆகிய 8 நாடுகள் வாக்களித்தன.

எத்தியோப்பியா, கஜகஸ்தான், கினியா, பெரு ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை. இதனால் ஐ.நா பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளில் பெரும்பான்மையான 9 நாடுகள் ஆதரவைப் பெறத் தவறியதால் ரஷ்யாவின் தீர்மானம் தோல்வியடைந்தது. தொடர்ந்து ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ கட்டரஸ் உரையாற்றுகையில் சிரிய விவகாரத்தில் பரஸ்பரம் விட்டுக் கொடுத்து அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒற்றுமையான முடிவை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தார்.

இதேவேளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ஈரான் அதிபர் ஹஸ்ஸன் றௌஹானியை சனிக்கிழமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிரியப் போரில் அமெரிக்கா தலைமையில் பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் இணைந்து ஈடுபட்டுள்ளமை குறித்துப் பேசியுள்ளார். இத்தொலைபேசி உரையாடலில் புட்டின், பல தரப்பினர் போரில் ஈடுபட்டு வரும் 7 வருடம் நீண்ட இந்த சிரியப் போரில் அமெரிக்கக் கூட்டணிப் படை குதித்ததை அடுத்து சுமார் 1/2 மில்லியன் பொது மக்களைக் கொன்று குவித்துள்ள இப்போருக்கு அரசியல் தீர்வு என்பதை இன்னமும் சாத்தியமற்றதாக மாற்றி விட்டது என்று றௌஹானிக்கு தெரிவித்ததுடன் அவரும் இதை ஆமோதித்துள்ளார்.
மேலும் இந்தப் போரில் ரஷ்யாவும் அமெரிக்காவும் பின் வாங்க மறுக்கும் பட்சத்தில் அது உலகளாவிய ரீதியில் சர்வதேச உறவுகளைப் பாதித்து மனித உயிர்களையும் தொடர்ந்து பறித்துக் கொண்டிருக்கும் என்றும் புட்டின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.