சிங்களவர்களிடம் பறிபோகும் நிலங்களை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இணக்கம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்க ளை கண்டிக்கும் வகையில் முதலமைச்சர் உட்பட வடமாகாணசபையின் 38 உறுப்பினர்களும் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக இன்றைய தினம் 9மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்து சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றையும் அனுப்பி வைக்கவுள்ளனர்.


முல்லைத்தீவு மணலாறு பகுதியில் இருந்து தமிழ் மக்கள் ஆரம்ப காலத்தில் பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அவர்களது உறுதி நிலங்கள் சிங்கள மக்களுக்கு உரித்துடையா தாக்கியிருந்தார்கள்.


இதனால் தமிழர்கள் மனலாற்றின் பெரும் பாகத்தை இழந்திருந்தார்கள். இதே போன்று மகாவலி அதிகார சபையால் மகாவலி நீர்ப்பாசன திட்டம் என்ற பெயரில் முல்லைத்தீவின் பெரும் நிலப்பரப்பை அபகரிக்கும் திட்டங்களும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்றன. இறுதியாக மகாவலி எல் வலயம் கொண்டு வரப்பட்டு கரைத்துறைபற்று பிரதேச சபையின் நிலப்பரப்பை கபளீகரம் செய்யும் திட்டங்களும் முன்னெடுக்கப்படு வருகின்றன.


காலப்போக்கில் முல்லைத்தீவு மாவட்டமே மகாவலி திட்டத்துக்குள் அபகரிக்கும் திட்டம் நடைபெற்று வருகின்றது. இந்த ஆபத்து நிலை தொடர்பில் மாகாண சபையின் ஆரம்பம் முதலே முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர்கள் சபையில் சுட்டிக்காட்டியிருந்தார்கள். எனினும் மாகாண சபையின் இறுதி வருடமான இந்த வருடத்திலாவது முல்லைத்தீவு சென்று சிங்களவர்களிடம் பறிபோகும் நிலங்களை பாதுகாக்கும் நடவடிக்கைக்கு மாகாண சபை உறுப்பினர்கள் இணங்கியுள்ளனர்.

இந்த நிலையில் வடக்கு மாகாண சபையின் 120 வது அமர்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரானால் பிரேரணை ஒன்று கொண்டு வரப்பட்டிருந்தது. இன்று 10ம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்திற்கு சென்று சிங்கள் குடியேற்றங்களை எதிர்த்து மாவட்ட செயலகம் முன்பாக போராட்டம் ஒன்றில் ஈடுபடுவது எனவும், போராட்டத்தின் பின்னர் சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைப்பது எனவும், அதன் பின்னர் சிங்கள அபகரிப்பு நடைபெறுகின்ற இடங்களுக்கு சென்று பார்வையிடுவது எனவும், தீர்மானிக்கப்பட்டுள்ளது
Powered by Blogger.