யாழ். போதனாவில் முகத்தாடை சத்திரசிகிச்சை குழு!

முகத்தாடை சத்திரசிகிச்சை நிபுணத்துவக் குழாம் பல பாகங்களிலிருந்தும் யாழ்ப்பாணம் வருகை தந்து ஏப்ரல் மாத பிற்பகுதியில் மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்குத்  தீர்மானித்துள்ளது.

மேற்படி சிகிச்சையில் கலந்து கொண்டு பயன்பெற விரும்புவோர் யாழ். போதனா வைத்தியசாலை முகத்தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவில் (OMF Unit) கிழமை நாட்களில் நேரடியாகவும் மற்றும் 0779938324 எனும் தொலைபேசி இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப்  பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ரி. சத்தியமூர்த்தி  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று (02) விடுத்துள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

யாழ்.போதனா வைத்தியசாலையில் இயங்கிவரும் முகத் தாடை வாய் சத்திரசிகிச்சைப் பிரிவானது (Oral & Maxillo Facial Unit – OMF unit) முக தாடை சம்பந்தமான நோய்களையும், குறைபாடுகளையும் கண்டறிவதுடன் அதற்குரிய சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகின்றது.

இதனடிப்படையில், பிறப்பிலிருந்து வருகின்ற குறைபாடுகள் (Congenital Craniofacial Malformations),  முக அமைப்புச் சீராக்கல் - தாடை அமைப்பு, காது அமைப்பு, நெற்றியின் அமைப்பு, கட்டிகள், புற்றுநோய்க்  கட்டிகள் அகற்றல், விபத்துக்களால் ஏற்படுகின்ற முகத் தாடை என்பு உடைவுகளை சீரமைப்புச் செய்தல் (Post  Traumatic Facial Reconstructions), பாரிசவாத நோயால் முகத்தசைகளில் ஏற்படுகின்ற குறைபாடுகளை சீராக்கல் (Facial Re- Animation) போன்ற பல சத்திரசிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு சேவையாக முகத் தாடை சத்திரசிகிச்சை நிபுணத்துவக் குழாம் பல பாகங்களிலிருந்தும் யாழ்ப்பாணம் வருகை தந்து ஏப்ரல் மாத பிற்பகுதியில் மேலதிக சிகிச்சைகளை வழங்குவதற்குத்  தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Powered by Blogger.