வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலி!

இன்று (02) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பலியாகியுள்ளனர்.
குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியில், யட்டிகல்பொத்த சந்தியில் இடம்பெற்ற இவ்விபத்தில், குருணாகலை நோக்கி வந்த லொறி ஒன்றும், அதற்கு எதிர்த்திசையில் வந்த முச்சக்கர வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று அதிகாலை 5.30 இற்கும் 6.00 மணிக்கும் இடையில், இடம்பெற்ற இவ்விபத்தின்போது, முச்சக்கரவண்டியில் பயணம் செய்த, தகப்பன், தாய், மகன(20), மகள் (08) ஆகிய நால்வர் மரணமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
முச்சக்கரவண்டியில் பயணம் செய்தோர் கந்தளாய் பிரதேசத்திலிருந்து அத்தனகல்ல பிரதேசத்திற்கு சென்றுள்ளதோடு, குறித்த லொறி மீகொடை பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு காய்கறிகளை ஏற்றிச் சென்றுள்ள நிலையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களின் அடையாள அட்டை மற்றும் கடிதங்கள் மூலம், பயணித்தவர்கள் அத்தனகல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என பொலிசார் கருதுகின்றனர்.
விபத்து இடம்பெறும்போது 20 வயது இளைஞனே முச்சக்கர வண்டியைச் செலுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது. குறித்த நபருக்கு தூக்கம் ஏற்பட்டதன் காரணமாக இவ்விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர். 
குறித்த நால்வரில் மூவரின் சடலம் தம்புள்ளை வைத்தியசாலையிலும் மற்றைய சடலம் கலேவல வைத்தியசாலையிம் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி கலேவல பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்ககது.

No comments

Powered by Blogger.