ஐக்கிய தேசியக் கட்சியின் மறு சீரமைப்புக்காக மூவர் பதவி விலகல்!

ஐக்கிய தேசியக் கட்சியின் மறு சீரமைப்புக்கு ஏதுவாக கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிம், தவிசாளர் மலிக் சமரவிக்ரம, பொருளாளர் எரான் விக்ரமரட்ன ஆகியோர் தமது பதவிகளிலிருந்து நேற்று வியாழக்கிழமை இராஜினாமா செய்துள்ளனர்.
இது தொடர்பான கடிதங்களை நேற்று அவர்கள் பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல்களின் பின்னர் கட்சியை மறுசீரமைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டதன் காரணமாக அடுத்த இரண்டு மாதங்களுக்கிடையில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்திருந்தார்.
நேற்று முன்தினம் பிரதமர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்ததன் பின்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தபோது இந்த வெற்றிக்கு ஒத்துழைத்த சகலருக்கும் நன்றி தெரிவித்ததோடு கட்சி மறுசீரமைப்புப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்தார். இதன் பின்னணியில் நேற்றுக்காலை கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் கபீர் ஹாஷிம் இராஜினாமாச் செய்தார். அதனையடுத்து கட்சி தவிசாளர் மலிக் சமரவிக்ரம, பொருளாளர் எரான் விக்ரமரட்ன ஆகியோரும் பதவி விலகியுள்ளனர். இவர்கள் தமது இராஜினாமாக் கடிதங்களை பிரதமருக்கு அனுப்பியுள்ளதாக ஸ்ரீகொத்தா வட்டாரம் தெரிவித்தது.
இதேவேளை, நாளை 7 ஆம் திகதிக்கு முன்னர் கட்சியில் பதவி நிலைகளில் உள்ள அனைவரும் விலகிக்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமையும், மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் கட்சி மறுசீரமைப்பு தொடர்பாக ஆராயும் கூட்டம் இடம்பெறவுள்ளது. அதன்போது புதிய நியமனங்கள், தெரிவுகள் குறித்து கவனம் செலுத்தப்படுமென ஸ்ரீகொத்தா வட்டாரம் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.