இனி நாம் புதிய பயணமொன்றை ஆரம்பிக்க வேண்டும்!

புதிய பயணமொன்றை இனி ஆரம்பிக்க வேண்டும். அதற்காக எதிர்வரும் நாட்களில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்ததன் ஊடாக பலமாக முன்னோக்கி செல்வதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதமருக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்ட மறுநாளான நேற்று ஸ்ரீகொத்தா தலைமையகத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று விஜயம் செய்தார். அங்கு திரண்டிருந்த கட்சி ஆதரவாளர்கள், முக்கியஸ்தர்களுடன் உரையாடிய பிரதமர் ஒத்துழைத்த சகலருக்கும் நன்றி தெரிவித்தார்.
இங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த தேநீர் விருந்துபசாரத்தில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
மூன்று வருடங்களின் பின்னர் எமது அரசாங்கம் இவ்வாறான பாரிய வெற்றியொன்றை பெற்றிருப்பது குறித்து மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு அரசாங்கத்திற்கு ஆதரவாக 46 வாக்குகள் கிடைத்தன. எனக்கும் அரசாங்கத்திற்கும் எதிராகத்தான் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது. இதனை தோற்கடிக்க ஒத்துழைப்பு வழங்கிய சகலருக்கும் நாம் நன்றி தெரிவிக்கிறேன்.
இனி நாம் புதிய பயணமொன்றை ஆரம்பிக்க வேண்டும். அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் சகலரையும் இணைத்து நாட்டிற்காக சிறந்த திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். எதிர்வரும் தினங்களில் இத் திட்டங்கள் தொடர்பில்பேச்சு நடத்த இருக்கின்றோம்.
ஐ.தே.கவினுள் புதுமுகங்களுக்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்கி முழுமையான மறுசீரமைப்பு ஏற்படுத்த இருக்கிறோம். 2020 தேர்தலுக்கு இதனூடாக தயார்படுத்த இருக்கிறோம்.
பலமாக முன்னோக்கி செல்வது தொடர்பான நம்பிக்கை எமக்கு கிடைத்துள்ளது என்றார்.
பிரதமருக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணை 46 மேலதிக வாக்குகளினால் நேற்று முன்தினம் இரவு தோற்கடிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.