புதுச்சேரியில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர்!

புதுச்சேரியில் நடந்த அனைத்துக் கட்சி பொதுக்கூட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசிய நெல்லை வாலிபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தலித் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போக செய்யும் மத்திய அரசை கண்டித்து அனைத்து கட்சி சார்பில் கண்டன பொதுக்கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே நேற்று மாலை நடந்தது. புதுச்சேரி மாநில திமுக,. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உட்பட பல கட்சி நிர்வாகிகள் பொதுக்கூட்ட மேடையில் இருந்தனர். இரவு 7.45 மணிக்கு மேடையின் பின்புறமாக வந்த வாலிபர் மேடையை ேநாக்கி பெட்ரோல் குண்டை வீசினார். அப்போது குறி தவறி மேடையின் முன்புறம் கீழே விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து எரிந்தது. இதனால் மேடையில் இருந்தவர்கள் பதறியடித்தபடி கீழே இறங்கி ஓடினர். கிழே தலைவர்களின் பேச்சை கேட்க வந்தவர்கள் தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். அப்போது, மேடையின் பின்புறமிருந்து பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்ப முயன்ற வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் வாலிபர் மூக்கு உடைந்து ரத்தமாக கொட்டியது. பொதுமக்களிடம் சிக்கிய வாலிபரை உருளையன்பேட்டை போலீசார் மீட்டு, காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட வாலிபர் நெல்லை மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த வேல்முருகன்(34) என்பது தெரியவந்தது. புதுச்சேரியில் ஓட்டலில் தங்கி வேலை செய்து வருகிறார். நேற்று வேல்முருகன் அளவுக்கதிகமாக பீர் குடித்து போதையில் பல இடங்களில் சுற்றித்திரிந்தபோது தான் குடித்துவிட்டு வைத்திருந்த பீர்பாட்டிலில் பெட்ரோலை நிரப்பி வந்து பொதுக்கூட்டத்தில் வீசியது தெரியவந்துள்ளது. குறி தவறியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இல்லையெனில் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும் என போலீசார் அச்சம் தெரிவித்தனர்.மேடையில் குறிப்பிட்ட சாதி குறித்து பேசியதால், ஆத்திரமடைந்து பெட்ரோல் குண்டு வீசியதாக கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Powered by Blogger.