ராமேஸ்வரத்தில் பலத்த காற்று படகுகள் கடலில் மூழ்கின!

ராமேஸ்வரம்: தமிழக கடலில் வரும் 15 ம் தேதி முதல் மீன்பிடி தடை காலம் துவங்கவுள்ள நிலையில், கடலில் குறைந்த மீன் வரத்தினாலும், இலங்கை கடற்படை நடவடிக்கைக்கு பயந்தும் மீனவர்கள் தங்களது படகுகளை கடலுக்கு அனுப்பாமல் நிறுத்தி வருகின்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் இருந்து நூற்றுக்கும் குறைவான படகுகளே கடலுக்கு மீன்பிடிக்க செல்கின்றன. ராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகில் இருந்து மீன்பிடி உபகரணங்களை எடுத்து செல்லும் பணியில் உரிமையாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று நள்ளிரவு ராமேஸ்வரம் கடற்கரையில் பலத்த காற்று வீசியது. பலத்த காற்றுக்கு கரையில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகு ஒன்று சேதமடைந்து கடலில் மூழ்கியது. நள்ளிரவில் 11 மணிக்கு மேல் ராமேஸ்வரம் கடலோர பகுதியில் திடீரென்று பலத்த காற்று வீசியதால் ராமேஸ்வரம் துறைமுக ஜெட்டி பாலத்தில் நிறுத்தப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் தங்கச்சிமடம் பொட்டேல் நகரை சேர்ந்த நேவிஸ் என்பவரின் விசைப்படகின் பக்கப்பலகைகள் முழுவதும் சேதமடைந்து கடலில் மூழ்கின. இது போல் இரண்டு சிறிய நாட்டுப்படகுகளும் சேதமடைந்து கடலில் மூழ்கின. காற்று காலங்களில் கரையில் நிறுத்தப்படும் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைவது வழக்கமாக நடைபெறுகிறது. எனவே படகுகளை பாதுகாப்பாக நிறுத்த ராமேஸ்வரத்தில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Powered by Blogger.