சென்னை மும்பையிடம் வீழ்ந்தது!

ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவின் பொறுப்பான ஆட்டத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 27-வது லீக் ஆட்டம் புனேவில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ்க்கு இடையில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது.
சென்னை அணியின் அம்பதி ராயுடு, ஷேன் வட்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஷேன் வட்சன் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரெய்னா ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் சேர்ந்து 71 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் ராயுடு 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து இறங்கிய தோனி நீண்ட நேரம் நிலைக்கவில்லை 26 ஓட்டங்களில் வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ரெய்னா சிறப்பாக ஆடினார். இறுதியில், சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்கள் எடுத்தது. ரெய்னா 47 பந்துகளில் 4 சிக்சர், 6 பவுண்டரியுடன் 75 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

மும்பை அணி சார்பில் மெக்கிளேனகன், க்ருணால் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து, 170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சூர்யகுமார் யாதவும், எவின் லெவிசும் களமிறங்கினர்.

முதலில் இருந்தே இருவரும் அடித்து விளையாடினர். பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 50 ஓட்டங்கள் எடுத்தனர். சென்னை அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடித்தனர். சூர்யகுமார் யாதவ் 34 பந்துகளில் ஒரு சிக்சர், 5 பவுண்டரியுடன் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அணித்தலைவர் ரோகித் சர்மா இறங்கினார். இதன்போது மும்பை அணி 10 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 71 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
அதன்பின் லெவிசும், ரோகித் சர்மாவும் பொறுப்புடன் ஆடினர். இந்த ஜோடியும் அரைச் சதம் கடந்தது.
பொறுப்பாக ஆடிய லெவிஸ் 47 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா களமிறங்கினார். அவர் ரோகித்துடன் சேர்ந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். ரோகித் சர்மா 56 ஓட்டங்களுடனும், பாண்ட்யா 16 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இறுதியில், மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை ரோகித் சர்மா பெற்றார்.சென்னை அணி சார்பில் ஹர்பஜன் சிங், பிராவோ ஆகியோர் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.