இரண்டாவது வாகன வரி விலக்கு பத்திரத்திற்கு விண்ணபித்த அமைச்சர்!
வடக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சர் மருத்துவர் ஜி.குணசீலன், இரண்டாவது வாகன வரி விலக்கு அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பித் துள்ளதாக, பேரவைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கு, கொழும்பு அரசு சிறப்பு அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக வாகன வரி விலக்கு அனுமதிப் பத்திரத்தை கடந்த ஆண்டு பெற்றுக் கொடுத்தது. வடக்கு மாகாண சபையின் உறுப்பினர்கள் அனைவரும் வாகன வரி விலக்கு அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பித்தனர்.
அப்போது வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த மருத்துவர் ஜி.குணசீலனும் விண்ணப்பித்திருந்தார். அவர் மருத்துவராக இருந்தபோது, அரசினால் வழங்கப்பட்ட வாகன வரி விலக்கு அனுமதிப் பத்திரத்தை ஏற்கனவே பெற்றிருந்தார்.
அதனைப் பெற்று 5 ஆண்டுகள் பூர்த்தியாவதற்கு முன்னர் விண்ணப்பித்தமை காரணமாக, மாகாண சபையின் ஏனைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்போது வாகன வரி விலக்கு அனுமதிப் பத்திரம், மருத்துவர் ஜி.குணசீலனுக்கு வழங்கப்படவில்லை.
வாகன வரி விலக்கு அனுமதிப் பத்திரத்தைப் பெற்று 5 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ளன. இதனால் மாகாண சபை உறுப்பினருக்குரிய வாகன வரி விலக்கு அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக் கொள்வதற்கு, மருத்துவர் ஜி.குணசீலன் தற்போது விண்ணப்பித்துள்ளார். வடக்கு மாகாண பேரவைச் செயலக வட்டாரங்களும் இதனை உறுதிப்படுத்தியது.
கருத்துகள் இல்லை