ஹைதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றி!

ஐபிஎல் 11வது சீசனின் 20வது போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சென்னை அணி திரில் வெற்றி பெற்றது.
ஹைதராபாத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற  ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
இதுவரை காயம் காரணமாக சென்னை அணியின் இடம்பெறாத டுபிளெசிஸ், இன்றைய போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கினார். டுபிளெசிஸும் ஷேன் வாட்சனும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
வாட்சன் 9 ரன்களிலும் டுபிளெசிஸ் 11 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ரெய்னாவும் ராயுடுவும் சிறப்பாக ஆடினர். இருவருமே அரைசதம் கடந்தனர். அதிரடியாக ஆடிய ராயுடு, 37 பந்துகளுக்கு 79 ரன்களை குவித்தார். சுரேஷ் ரெய்னா 54 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அம்பாதி ராயுடுவின் அதிரடி பேட்டிங்கால் சென்னை அணி 20 ஓவருக்கு 182 ரன்கள் குவித்தது. 
183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ரிக்கி புயி மற்றும் கேன் வில்லியம்சன் களமிறங்கினர். ரிக்கி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார். அதன்பிறகு களமிறங்கிய மனீஷ் பாண்டேவும் 0 ரன்னில் வெளியேறினார். தீபக் ஹூடாவும் 1 ரன்னில் அவுட்டானார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறிய ஹைதராபாத் அணிக்கு கேப்டன் வில்லியம்சனும் ஷாகிப் அல் ஹாசனும் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் சேர்த்தனர்.
27 ரன்களில் ஷாகிப் அல் ஹாசன் வெளியேறினார். இதையடுத்து வில்லியம்சனுடன் யூசுப் பதான் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினர். அதிரடியாக ஆடிய வில்லியம்சன் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து யூசுப் பதானும் 45 ரன்களில் ஆட்டமிழக்க, ஹைதராபாத் அணியிடமிருந்து ஆட்டம், சென்னையின் பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் 19 ரன்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை பிராவோ வீசினார். முதல் மூன்று பந்துகளில் சஹா வெறும் 3 ரன்களே எடுத்தார். இதையடுத்து 3 பந்துகளுக்கு 16 ரன்கள் என்ற கடினமான நிலை உருவானது. 4வது பந்தை எதிர்கொண்ட ரஷீத் கான், சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் பவுண்டரி அடிக்க, ஆட்டம் விறுவிறுப்பானது. கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் பிராவோ சாதுர்யமாக பந்துவீச, அந்த பந்தில் ரஷீத்தால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது.
இதையடுத்து சென்னை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக அம்பாதி ராயுடு தேர்வு செய்யப்பட்டார்.
Powered by Blogger.