ஆசிரியைகளுக்கான உடை ஒழுங்குவிதிகள் அடிப்படையில் அணிவதே பிரச்சினைக்குத் தீர்வு!

"திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில், பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசார மரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 குறித்த கல்லூயிரில் ஏற்பட்டுள்ள ஆசிரிய ஆடை  தொடர்பான சர்ச்சை குறித்து, அமைச்சர் ரிஷாட் பதியுதீன், சம்பந்தனுக்கு அனுப்பி வைத்த கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், அனுப்பப்பட்ட பதில் கடிதத்தில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அந்தக் கடிதத்தில்,  "2400 மாணவிகள் கல்வி பயிலும் இக்கல்லூரியில் 120க்கும் மேற்பட்ட முஸ்லிம் மாணவிகளும் 110 கத்தோலிக்க, கிறிஸ்தவ மாணவிகளும் பயில்கின்றனர்.
இது ஒரு தேசிய பாடசாலையாக உள்ளமையால் இங்கு எந்த இனத்தை அல்லது மதத்தைச் சேர்ந்தவர்களும் கல்வி கற்கவும் கல்விபோதிக்கவும் எத்தகைய தடையும் இல்லை.  ஆயினும், கல்லூரியில் பேணப்பட்டு வந்த ஒழுக்கக் கட்டுப்பாடுகள், கலாசாரமரபுகள், மாணவிகள், ஆசிரியைகள் அணிகின்ற உடை தொடர்பான ஒழுங்குமுறைகள் அவ்வாறே பேணப்படவேண்டு என்பது இந்தக் கல்லூரி சமூகத்தின் விருப்பமாகும். 
முஸ்லிம் ஆசிரியைகள் ஏற்கனவே இந்தக் கல்லூரிக்குச் சேலை அணிந்து, தங்களது பாரம்பரியமான முக்காடு (பர்தா) அணிந்துவந்து சேவையாற்றியது போல மேலும் தொடர்வதை இக்கல்லூரி சமூகம் எவ்விதத்திலும் ஆட்சேபிக்கமாட்டாது. ஆசிரியைகள் கல்லூரிக்கு வருகின்றபோது மட்டும் ஆசிரியைகளுக்கான உடைபற்றிய தேசியக்  கொள்கைகளின் அடிப்படையிலும் இக்கல்லூரி ஆசிரியைகளுக்கான உடை ஒழுங்குவிதிகள் அடிப்படையிலும் செயற்படுவதே இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக அமையும் எனநான் நினைக்கின்றேன். 
இவ்விடயத்தில் எதிர் எதிரான இன, மத ரீதியான ஆர்ப்பாட்டங்களைச் சமயசார்பு அமைப்புக்கள் செய்வது விரும்பத்தக்கதல்ல என்பதே எனது நிலைப்பாடு." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.