பாஸ்போர்ட் அலுவலகத்தில் பன்றியை விட்டு முற்றுகை!

புதுவை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேற்று பன்றியை உள்ளே விட்டு முற்றுகையில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 72 பேரை போலீசார் கைது செய்தனர். வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில், விடுதலை சிறுத்தைகள் மற்றும் பழங்குடியின விடுதலை இயக்கம் இணைந்து நேற்று போராட்டம் நடத்தினர். முன்னதாக புதுவை புதிய பஸ் நிலையம் அருகே திரண்ட அவர்கள், பழங்குடியின விடுதலை இயக்கத் தலைவர் ஏகாம்பரம், விடுதலை சிறுத்தை முதன்மை செயலாளர் தேவபொழிலன் ஆகியோர் தலைமையில் பேரணியாக புறப்பட்டு மறைமலையடிகள் சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான பாஸ்போர்ட் அலுவலகத்துக்கு சென்றனர். 
அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த உருளையன்பேட்டை போலீசார், அலுவலகத்தின் நுழைவு வாயிலை இழுத்து மூடி அவர்களை உள்ளே விடாமல் தடுத்தனர். தொடர்ந்து அவர்கள் அங்கு மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 அப்போது முற்றுகையில் ஈடுபட்டிருந்தவர்களில் சிலர் நுழைவு வாயிலில் ஏறி உள்ளே குதித்து பாஸ்போர்ட் அலுவலகத்தின் உள்ளே பன்றி குட்டியை விட்டனர். அது அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் போலீசார் அந்த பன்றிக்குட்டியை பிடித்து வெளியே கொண்டு வந்தனர். இதையடுத்து போலீசார், முற்றுகையில் ஈடுபட்ட 18 பெண்கள் உள்ளிட்ட 72 பேரை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.