வலி கிழக்கு பிரதேச சபையின் முதலாவது கன்னியமர்வு!

 எம் மண்ணுக்காகாவும் எம் இனத்திற்காகவும் மடிந்த மாவீரர்களை நெஞ்சினில் நிறுத்தி
கெளரவ தவிசாளர் அவர்களே கெளரவ உப தவிசாளர் அவர்களே கெளரவ என் சக உறுப்பினர்களே மதிப்பிற்குரிய செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்களே அனைவருக்கும் இந்நேர வணக்கத்தினை தெரிவித்துக்கொண்டு. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் வலிகிழக்கு பிரதேச சபையில் 16 ம் வட்டாரத்தில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக உங்கள் முன் வந்துள்ளேன். எனது வெற்றிக்கு உழைத்த கட்சி தொண்டர்கள் மற்றும் எனது நண்பர்களுக்கும் மற்றும் எனது கட்சி தலைமைக்கும் இந்த சபையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
எமது மண்ணின் விடுதலைக்காக களமாடி மடிந்த மாவீரர்கள் உறங்குகின்ற கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. அதனை மீட்டு மக்கள் தங்களுடைய அஞ்சலிகளினை செலுத்துவதற்கு இந்த சபை ஏற்பாடு செய்தல் வேண்டும். அது முடியாமல் போகும் பட்சத்தில் அதற்கருகாமையில் மாவீரர் நினைவுத்தூபியை அமைத்து மக்கள் அஞ்சலி செலுத்துவதற்கான ஓர் ஏற்பாட்டினையாவது இச்சபையானது செயற்படுத்தல் வேண்டும்.
கெளரவ உறுப்பினர் ஐங்கரன் அவர்கள் கூறியது போல் வலி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள ஸ்ரீ சபாவதி நாவலர் சனசமூ நிலையம் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த நிலையில் தற்பொழுது தனி ஒருவரால் சுற்றிவர வேலி அமைக்கப்பட்டு சனசமூக நிலையத்தின் செயற்பாடுகள் முடக்கப்பட்டுள்ளது. இதனை பிரதேச சபைக்கு பல முறை தெரியப்படுத்தியிருந்த போதும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எனவே இச்சபையாவது இதற்கான நடவடிக்கையினை எடுத்து சனசமூக நிலையத்தினை மக்கள் பாவனைக்கு வழங்க வேண்டும்
எமது 16 ம் வட்டாரத்துக்குரிய வீதிகள் அனைத்தும் 20 ஆண்டுகளுக்கு மேலாக புனரமைக்கப்படாமல் உள்ளது. அதனையும் புனரமைப்பதர்குரிய நடவடிக்கைகளினை இச்சபை எடுத்தல் வேண்டும்
எமது பிரதேசத்திலே ஒரு நிலப்பரப்பிற்கு இரு பகுதியினர் அதாவது கோப்பாய் ஞானவைரவர் ஆலயத்தினரும் கோப்பாய் ஸ்ரார் விளையாட்டு கழகத்தினரும் உரிமை கொண்டாடி வருகின்றனர். இதனால் ஒரு சமூகத்தினுள் ஏற்பட்டுள்ள பிணக்கினை இந்த சபை தீர்த்து இருபகுதியினரிடையேயும் ஓர் இணக்கப்பாட்டிணை ஏற்படுத்தல் வேண்டும்.
கோப்பாய் சந்திக்கு அண்மையில் அமைந்துள்ள இச்சபையின் ஆழுகைக்குட்பட்ட பொதுசந்தையானது கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இதனை புனரமைத்து உள்ளூர் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் ஓர் சந்தையாக மாற்றியமைத்தல் வேண்டும்.
கடந்த தேர்தலிலே நாம் கட்சிரீதியான கருத்து வேறுபாடுகளினை கொண்டிருந்தோம். எனினும் தற்போது மக்களின் அபிவிருத்தியினை நோக்காக கொண்டு ஒரு சபை உறுப்பினர்கள் என்ற ரீதியில் நாம் அனைவரும் புரிந்துணர்வுடனும் விட்டுக்கொடுப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டு வடபகுதியிலே சிறந்த ஊழலற்ற பிரதேச சபையாக அனைவருக்கும் முன்மாதிரியாக செயற்படுவோம்
இந்த சந்தர்ப்பத்தினை அளித்த சபைக்கு நன்றி கூறி அமர்கின்றேன்.

நன்றி.

Powered by Blogger.