வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வருமானவரி இல்லை!

புதிய இறைவரி சட்டத்தின் மூலம் ஓய்வூதியம் பெறுபவர்களிடமும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களிடமும் அரசாங்கம் வருமானவரி அறவிடப்போவதாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானவை என நிதி மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். ஓய்வூதியம் பெறுபவர்களின் வங்கிக் கணக்கில் வருடாந்தம் வட்டியாக 15 இலட்சத்துக்கும் அதிகமான பணம் கிடைக்குமாயின் வரி அறவிடப்படும். அதேபோல, வெளிநாட்டில் பணியாற்றுபவர்கள் இலங்கையில் ஏதாவது வருமானம் ஈட்டுவார்களாயின் குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் ஈட்டப்படும் வருமானத்துக்கே வரி அறவிடப்படும் என அமைச்சர் விளக்கமளித்தார்.
விசேட வியாபார பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளைகளை அங்கீகரிப்பது குறித்த விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
புதிய இறைவரி சட்டம் தொடர்பில் கடந்த சில நாட்களாக பிழையான தகவல்களும், பொய்யான தகவல்களும் வெளியாகி வருகின்றன. நாட்டின் சனத்தொகையில் 18 வீதமானவர்களே நேரடி வரியைச் செலுத்துகின்றனர். எஞ்சிய 82 வீதமும் மறைமுக வரியே அறவிடப்படுகிறது. உலகில் இலங்கையிலேயே மிகவும் குறைந்த வீதமானவர்கள் நேரடி வரியைச் செலுத்துகின்றனர். மலேசியாவில் 72 வீத வருமானம் நேரடி வரியின் மூலம் ஈட்டப்படுகிறது. இந்தியாவில் 54 வீதமும், பங்காளாதேஷில் 33 வீதமும் நேரடி வரி அறவிடப்படுகிறது. இவ்வாறான நிலையில் மக்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது நியாயமான வரிமுறையைக் கொண்டுவரும் நோக்கிலேயே புதிய இறைவரி சட்டத்தைக் கொண்டுவந்துள்ளோம். இலங்கையில் தனவந்தர்களும், சாதாரண மக்களும் மறைமுக வரியின் ஊடாக ஒரேயளவு பெறுமதியையே வரியாகச் செலுத்துகின்றனர்.
கடந்த காலத்தில் அமைச்சர்கள் தமக்குத் தேவையானவர்களுக்கு வழங்கிய வரிச்சலுகையை வழங்கி, கமிஷன்கள் பெற்றமையை நாம் மறக்கவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு வரி குறித்த தீர்மானத்தை அறவிடும் உரிமையை அமைச்சரிடமிருந்து பெற்று அதனை சட்டமாக்கியுள்ளோம்.
பொய்யான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களிடம் வருமான வரி அறவிடப்படுவதாக பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. வெளிநாட்டில் பணிபுரியும் நபர்கள் இலங்கையில் ஏதாவது தொழிலொன்றைச் செய்து அதனூடாக குறிப்பிட்ட எல்லையைவிட அதிகமான வருமானத்தை ஈட்டுவார்களாயின் அதற்கே வரி செலுத்தவேண்டும். அது மாத்திரமன்றி இலங்கையில் இருந்துகொண்டு வெளிநாடுகளுக்கு சேவைகளை வழங்குவோருக்கு 15 மில்லியன் ரூபாவரை வரிவிலக்களிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஓய்வூதியம் பெறுபவர்களிடம் வருமான வரி அறவிடப்படப்போவதாகவும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. ஓய்வுபெற்றவர்களை வருமான வரியிலிருந்து முழுமையாக விலக்களித்துள்ளோம். எனினும், அவர்களுக்கு வட்டிவருமானம் வருடமொன்றுக்கு 15 இலட்சத்துக்கு அதிகமாகக் கிடைக்குமாயின் அதற்கே வரி அறவிடப்படும். அதற்கு மாதாந்தம் ஒரு இலட்சத்துக்கு மேல் வட்டி கிடைப்பதுடன், அவர்களின் வங்கிக் கணக்கில் இரண்டு கோடி ரூபா பணம் இருக்க வேண்டும். ஓய்வூதியம் பெறுபவர்களில் மிகவும் குறைந்தளவானவர்களிடமே இந்தளவு பணம் இருக்கும்.
மூலதன ஆதாய வரி தொடர்பில் பொய்யான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலதிகமான காணி அல்லது வீடொன்றை விற்பதன் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கே வரி இது ஏற்புடையது. விற்பனை விலையானது செலவாகக் கருதப்படும். விற்பனை விலையானது 2017 செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி சந்தை விலையின் அடிப்படையில் கணிக்கப்படும். இரத்த சொந்தம் உடையவர்களுக்கு பரிசாக வழங்கப்படும்போது ஒரு வீட்டுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும். வாகன விற்பனைகளுக்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படுவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. மூலதன ஆதாய வரியானது காணி, வீடு, கட்டடங்கள் மற்றும் பங்குகளுக்கே ஏற்புடையது.
சம்பளங்களுக்கு வரி விதிக்கப்படுவதாக பிழையான தகவல்கள் கூறப்படுகின்றன. மாதாந்தம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான சம்பளத்தைப் பெறுபவர்களிடமே வரி அறவிடப்படவுள்ளது. ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வருமானம் பெற்றவர்களிடம் 1500 ரூபா வரி அறவிடப்பட்டது. எனினும், புதிய சட்டத்தின் கீழ் 100,000 ரூபாவரை வரி விலக்களிக்கப்பட்டுள்ளது. மாதாந்த சம்பளமாக 150,000 ரூபாவுக்கு அதிகமாக ஈட்டுபவர்களிடம் 2000 எனக் குறைந்தளவு தொகையே வரியாக அறவிடப்படவுள்ளது.
கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் வங்கியில் நிலையான வைப்புக்களுக்கான வட்டி அதிகரித்திருப்பதால், வட்டி வருமானமும் அதிகரித்துள்ளது. இதற்கமைய 10 இலட்சம் ரூபாய் நிலையான வைப்பிலிட்டிருந்தால் 12 வீத வட்டிக்கு 6,000 ரூபாவே வரியாக அறவிடப்படுகிறது என்றார்.
Powered by Blogger.