வேலூரில் பட்டாசு தொழிற்சாலைவெடி விபத்தில் இளம்பெண் பலி!

வேலூரில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இளம்பெண் பரிதாபமாக பலியானார். மேலும், 4 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.வேலூர் கொணவட்டத்தை சேர்ந்தவர் அப்துல்காதர். இவர் கன்சால்பேட்டை காந்தி நகரில் நாட்டு பட்டாசுகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.
நேற்று காலை வேலூர் இந்திரா நகரைச் சேர்ந்த சிவகுமார்(35), கன்சால்பேட்டையைச் சேர்ந்த தீபா(26), காந்திநகரைச் சேர்ந்த கவியரசன்(32), ஷீலா(35), புஷ்பா(30,) சுரேஷ், முகமது அலி, சபியுல்லா ஆகியோர் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 10.30 மணியளவில் பட்டாசு தயாரிப்பதற்கான பாஸ்பரஸ் ரசாயனக் கலவையை தயார் செய்தபோது அதிக உராய்வு மற்றும் உஷ்ணம் ஏற்பட்டு ‘டமார்’ என பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தொழிற்சாலையின் மேற்கூரை சுமார் 20 அடிக்கு மேல் பறந்து விழுந்து நொறுங்கியது. சுவர்களும் இடிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர். வெடி விபத்து காரணமாக அப்பகுதியில் கரும்புகை மூட்டம் சூழ்ந்தது. தகவலறிந்து வேலூர் தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.அப்போது, சிவகுமார், கவியரசன், ஷீலா, புஷ்பா ஆகியோர் உடல் முழுவதும் பலத்த தீக்காயங்களுடன் வெளியே வந்தனர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பட்டாசுகள் வெடித்து சிதறியபடி இருந்ததால் சுமார் 1 மணி நேரம் போராடி தீ அணைக்கப்பட்டது.
அதற்குள் கன்சால்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்த ஜெயவேல் மனைவி தீபா(33) உடல் கருகி பலியானார். இவருக்கு 3 மகள், ஒரு மகன் உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த எஸ்பி பகலவன் வந்து, விபத்து நடந்த பகுதியை ஆய்வு செய்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த தொழிற்சாலை உள்ளதால் தினமும் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறோம். எனவே வீடுகள், வழிபாட்டு தலங்கள் உள்ள பகுதியில் பட்டாசு தொழிற்சாலையை இயக்க தடை விதிக்க வேண்டும் என்றனர்.
Powered by Blogger.