ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டு பிரதித் தலைவர்கள் உருவாக்கப்படுவார்களா?

தாம் உட்பட தமது நிலைப்பாட்டிலுள்ளவர்கள் எதிர்பார்க்கும் விதத்தில் ஐ. தே. கட்சியில் மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் என்றும் அவ்வாறு இடம்பெறாவிட்டால் எந்த சந்தர்ப்பத்திலும் அதற்கு எதிரான தீர்மானத்தை எடுப்பதில் பின்நிற்கப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கேபண்டார தெரிவித்துள்ளார்.
கட்சிக்குள் நிலவும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளைத் தீர்ப்பதற்கு தாமும் தமது குழுவினரும் தேவையான ஆலோசனைகளை முன்வைத்துள்ளதாகவும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு இதுவே உகந்த தருணம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எவ்வாறெனினும் இம்முறை ஐ. தே. கட்சிக்குள் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஸ்திரமானதாக அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முதலில் பிரதமருக்கு எதிராக செயற்படப் போவதாக குறிப்பிட்டிருந்த இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டார இறுதி சந்தர்ப்பத்தில் பிரதமருக்கு ஆதரவாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அமைச்சர் சஜித் பிரேமதாசவும் ஐக்கிய தேசியக் கட்சியில் இரண்டு பிரதித் தலைவர்கள் உருவாக்கப்படுவார்களானால் தாம் அதை முழுமையாக எதிர்ப்பதாகவும் தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் ஐ. தே. கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் அவ்வாறு இரண்டு பிரதித் தலைவர்கள் நியமிக்கப்படுவார்களானால் தாம் தமது பிரதித் தலைவர் பதவியை இராஜினாமாச் செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார். மேற்படி நிர்வாகக் குழுக்கூட்டத்தில் சஜித் பிரேமதாசவை பிரதித் தலைவராகவும், முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவை உப தலைவராக நியமிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அதேவேளை மேலும் உப தலைவர்கள் பதவிகளை உருவாக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் கட்சி மறுசீரமைப்பின் போது அதற்கான முடிவு எடுக்கப்படவுள்ளதாகவும் அவ்வாட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.