கொழும்பு அரசியல் தற்போது பரபரப்பு!

கொழும்பு அரசியல் பெரும் பரபரப்பை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேரணைக்கு ஆதரவாக அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் வாக்களித்துள்ளமையை அடுத்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 21ம் திகதி கூட்டு எதிர்கட்சி சார்பில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்பட்டது. 55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் இந்த பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து, பிரேரணையை வெற்றியடைச் செய்ய கூட்டு எதிர்க்கட்சியும், பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தன.
இதன் காரணமாக கடந்த ஒரு வார காலமாக கொழும்பு அரசியல் மிகவும் பரபரப்பாகவே காணப்பட்டது.
பல்வேறு அரசியல் தலைமைகளின் சந்திப்புக்கள், இரகசிய சந்திப்புகள், வாக்குறுதிகள் என உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொள்ள தீவிர முயற்சிகள் இரு தரப்பிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ஒருவழியாக நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் இன்று இடம்பெற்ற நிலையில், வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 76 பேரும், எதிராக 122 பேரும் வாக்களித்தனர். 26 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
இதன்மூலம் 46 மேலதிக வாக்குகளினால் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிப்பட்டுள்ளது. ஒருவாறாக நம்பிக்கையில்லா பிரேரணையால் கொழும்பு அரசியலில் ஏற்பட்டிருந்த பரபரப்பு தணிந்துள்ளது.
எனினும், கொழும்பு அரசியலில் நாளை என்ன நடக்கப்போகின்றது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. நாடாளுமன்றம் மீண்டும் நாளை காலை 10 மணிக்கு கூட உள்ளது.
இந்நிலையில், தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லப்படுமா, அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா, அல்லது ஐக்கிய தேசியக் கட்சிய தலைமையிலான அரசாங்கம் ஏற்படுத்தப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க,
“நம்பிக்கையில்லா பிரேரணையில் எமக்கு எதிராக வாக்களித்தவர்களின் உதவியின்றி ஆதரவாக வாக்களித்தவர்களுடன் இணைந்து ஆட்சியை முன்னெடுத்துச் செல்வோம்” என தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் ஆறு பேரையும் உடனடியான அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் 33 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்று பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பு அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.