அமைச்சர்களுக்கான பணியாளர்களால் செலவீனம் அதிகரிப்பு!


அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டியிருக்கும் சூழ்நிலையில், அமைச்சர்கள் பெரும் எண்ணிக்கையான தனிப்பட்ட பணியாளர்களை சேவைக்கு அமர்த்தியிருப்பதால் அரசாங்க செலவீனம் அதிகரித்திருப்பதாக ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றஞ்சாட்டினார்.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் இந்த விவகாரத்தில் அரசியலமைப்பை மீறியிருப்பதாகவும் கூறினார்.
ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கும் அமைச்சர்களுக்கு இரண்டு அல்லது மூன்று தொகுதி தனியார் பணியாளர்கள் அவசியமில்லை. 19ஆவது திருத்தத்துக்கு அமைய அமைச்சர்களின் எண்ணிக்கை குறைக்கப்படவேண்டியிருக்கின்றபோதும், அமைச்சர்கள் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் அமைச்சர்கள் சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையைவிட தனியார் பணியாளர்களை பணியில் அமர்த்தியிருப்பதாகவும் கூறினார். மீன்பிடித்துறை அமைச்சரின் தனியார் பணியாளர்கள் குறித்து வாய்மூல விடைக்கான கேள்விநேரத்தில் பிமல் ரத்னாயக்க கேள்வியெழுப்பினார். இதன்போதே அவர் இந்த விடயங்களைச் சுட்டிக்காட்டினார்.
அமைச்சர்களின் தனிப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 15 ஆக மட்டுப்படுத்தப்பட வேண்டும் என சுற்றுநிருபத்தில் இருக்கின்றபோதும் பல அமைச்சர்கள் அதிகூடுதலானவர்களை நியமித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் தனது அமைச்சின் கீழ் 21 தனிப்பட்ட பணியாளர்கள் சேவையில் இருப்பதாகவும், தான் சட்டத்தையோ அல்லது சுற்றுநிருபத்தை மீறியோ எவரையும் பணியில் அமர்த்தவில்லையென்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.