வடக்கில் இராணுவம் நிலைகொண்டிருப்பது கரவெட்டி பிரதேசசபைக்கு பலம்!

கரவெட்டி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட மண்டான் பகுதியில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதற்கு சிறிலங்கா இராணுவத்தின் உதவியை நாடுவது என்ற அரசியல்ரீதியிலான பிழையான தீர்மானத்தை எடுத்துள்ளது கரவெட்டி பிரதேசசபை. இந்த தீர்மானத்தை தமிழர் விடுதலை கூட்டணி தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் ஆதரித்துமுள்ளனர்.

கரவெட்டி பிரதேசசபையின் இரண்டாவது அமர்வு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை பிரதேசசபை சபா மண்டபத்தில் நடந்தது. தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரன் தலைமையில் நடந்த அமர்விலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டது.

கரவெட்டி பிரதேசசபைக்குட்பட்ட பகுதியிலுள்ள கழிவுகள் மண்டான் வெளி பகுதியில் கொட்டப்பட்டுள்ளன. அவற்றை அகற்றுவதற்கே சிறிலங்கா இராணுவத்தின் உதவியை நாட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அங்கு உடைந்த கண்ணாடி போத்தல்கள் உள்ளதால் ரயர் உள்ள வாகனங்களை கொண்டு செல்ல முடியாது என்றும், செயின் உள்ள கனரக வாகனங்களை அனுராதபுரத்தில் இருந்து கொண்டுவருவதானால் ஒன்றரை இலட்சம் ரூபா செலவாகும் என்றும், ஆனால் இராணுவத்தினர் 95 ஆயிரம் ரூபாவுடன் அதை அகற்றி தருவதாக கூறியுள்ளனர் என தவிசாளர் ஐங்கரன் கூறினார்.

அதை த.வி.கூ தவிர்ந்த மற்றையவர்கள் ஆதரிக்க, தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

ஆக, வடக்கில் இராணுவம் நிலைகொண்டிருப்பது தேவையானதுதான் என்ற மறைமுக செய்தியை கரவெட்டி பிரதேசசபை தனது இரண்டாவது அமர்விலேயே மறைமுக தீர்மானம் ஒன்றின் மூலம் குறிப்புணர்த்தியுள்ளது. அத்துடன், வடக்கில் நிலைகொண்டுள்ள சிறிலங்கா இராணுவத்திற்கு 95,000 ரூபா பணத்தையும் வழங்கவுள்ளனர்.

எனினும், உள்ளூர் கழிவகற்றும் தொழிலாளர்கள் மூலமே இதனை செய்திருக்க வேண்டும். கரவெட்டி பிரதேசசபை பகுதியிலும் அதிகளவான கூலித்தொழிலாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. அவர்களின் வருமானத்திற்கும் வழிபிறந்திருக்கும். அல்லது, புதிய பொறிமுறையொன்றை கரவெட்டி பிரதேசசபை கண்டறிந்திருக்க வேண்டும். சிறிலங்கா இராணுவத்தை இந்த பணிகளிற்கு அழைப்பது அரசியல் முதிர்ச்சியற்ற நடவடிக்கையாகும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.