செல்வ வளம் தரும் சித்ரா பவுர்ணமி விரதம்(வேதியன்)

சித்திரை மாதப் பவுர்ணமி சித்திர குப்தருக்கு உரிய நாளாகப் போற்றப்படுகிறது. அன்றுதான் அவரது அவதார தினம். மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்குகளை மிகத் துல்லியமாக எழுதும் பணியை வெகு சிறப்பாகச் செய்து வருபவர் சித்திர குப்தர்.
சித்திர குப்தரின் பிறப்பு: ஒரு முறை அனைத்து திக்குப் பாலர்களும் கைலாயத்திற்குச் சென்று ஈசனையும் உமையம்மையையும் வணங்கினார்கள். அனைவரது முகமும் மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது. ஆனால் யமனின் முகம் மட்டும் சற்றே வாட்டமாக இருந்தது. காரணம் கேட்டார் மாதொரு பாகன். இறைவா பூமியில் மக்கள் மிக அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் நானோ ஒருவன் அனைவரது பிறப்பு இறப்புக் கணக்குகளையும் அவர்களது பாவ புண்ணிய கணக்குகளையும் என் ஒருவனால் சமாளிக்க முடியவில்லை. எனக்குத் துணையாக கணக்கு வழக்குகளை மிகக் கவனமாகப் பாதுகாத்து எழுதி வைக்கும் நம்பிக்கையான உதவியாளன் ஒருவன் கிடைத்தால் என் பாரம் குறையும் என்று வேண்டுகோள் வைத்தான் காலன்.
சிவனும், உன் கோரிக்கை நியாயமானதுதான். உரிய நேரம் வரும் போது உனக்கு அந்த உதவியாளன் கிடைப்பான்! என்று அருளினார் அகமகிழ்ந்த யமன் தன் உலகம் சென்றான். பிரம்ம தேவர் குழம்பிப் போனார். ஏனெனில், உதவியாளனைப் படைக்கும் பொறுப்பை அவரிடம் விட்டு விட்டார் ஈசன் சிந்தித்தார் பிரம்மா, சூரியன் ஒருவனால்தான் இத்தகைய ஒருவனைப் பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார். பிரம்ம தேவர் சூரியன் மனதில் ஆசையைத் தோற்றுவித்தார். அதனால் அவன் மனதில் காதல் உண்டானது. வானவில்லை அழகான பெண்ணாக மாற்றி, நீளாதேவி என்று பெயரிட்டு, அவளைத் திருமணம் செய்துகொண்டார் சூரிய பகவான் அவர்களுக்கு சித்திரா பவுர்ணமியன்று பிறந்தவர் தான் சித்திரகுப்தர்.
இன்னொரு புராண வரலாற்றின்படி, கைலாயத்தில் அழகான தங்கத் தகட்டில் சித்திரம் ஒன்றை வரைந்தாள், பார்வதி, சிவபெருமான், அதற்கு உயிர் கொடுத்தார். சித்திரத்திலிருந்து தோன்றியதால் சித்திர குப்தர் எனப்பட்டார். சித்திர புத்திரன் எனவும் சொல்வார்கள்.
சித்திர குப்தரின் சிறப்புகள்: சித்திர குப்தருக்கு உரிய வயது வந்தவுடன் கல்வி கற்பித்தார் சூரிய பகவான். கல்வி, கணிதம், இலக்கணம் என அனைத்திலும் சிறந்து விளங்கினார். அவர். தந்தையின் யோசனைப்படி ஈசனை நோக்கித் தவமிருந்தார். சிவபெருமான் அவரது தவத்திற்கு மெச்சி ÷ நரில் தோன்றி, இனி நீ நினைத்தது அனைத்தும் நடக்கும். என்று வரமளித்தார். அதை சோதித்துப் பார்க்க படைப்புத் தொழிலில் இறங்கினார் சித்திரகு ப்தர். கவலைக்கு உள்ளன பிரம்மா, சூரியனை அழைத்து விஷயத்தைக் கூறினார். உடனே சூரியன், மகனை அழைத்தார். மகனே! படைப்புத்தொழில் பிரம்மனுக்கு உரியது என்று மகேஸ்வரனால் முன்பே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அதனால் அதில் நீ தலையிடக்கூடாது. நீ பிறந்ததே யமனின் உதவி யாளனாக இருந்து, மக்களின் பாவ புண்ணியக் கணக்குகளை கவனித்துக் கொள்ளத்தான். எனவே நீ அங்கு சென்று உயிர்களின் கணக்குகளை ய மனுக்கு எடுத்துக் கூறு! அவர் அதற்குத் தகுந்தபடி தண்டனை அளிப்பார். என்று சொல்லி ஆசிர்வதித்தார். அதோடு என்றும் தீரவே தீராத கணக்கு எழுதும் புத்தகத்தையும் அளித்தார்.
அதைச் சிரமேற்கொண்ட சித்திர குப்தர். யமலோகம் சென்று விவரங்களைக் கூறினார். தன் நம்பிக்கைக்குரிய உதவியாளன் கிடைத்து விட்டான் என்று உடனே சம்மதித்தார் யமதர்ம ராஜன். இறையனார்க்கு நன்றியும் தெரிவித்தார். அன்று முதல் இன்று வரை மக்களின் மனதில் ஒளிந்திருக்கும் எண்ணங்களையும் அவர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளையும் சாரணர்கள் என்ற ஒற்றர்களின் உதவியால் கண்டறிந்து எழுதி வருகிறார் அவர். அனைத்தையும் மிக மிக ரகசியமாகப் பாதுகாப்பதால் சித்திர குப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. குப்தர் என்றால் ரகசியம் காப்பவர் என்று பொருள். இவர் வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்து சுகாசன நிலையில் வீற்றிருப்பார். வலது கையில் எழுத்தாணியும் இடக்கையில் சுவடியும் இருக்கும் மயன் மகள் பிரபாவதி மனுவின் மகள் நீலாவதி, விஸ்வ கர்மாவின் மகள் கர்ணிகி ஆகியோர் இவரது மனைவியர் அக்கிர சந்தானி என்பது இவரது கணக்குப் புத்தகத்தின் பெயர்.
இந்த நோன்பு தோன்ற காரணமாகவும் ஒரு புராணக் கதை உண்டு.
பல காலம் முன்பாக முக்திபுரி என்ற ஊரில் கலாவதி என்ற இளம்பெண் வாழ்ந்து வந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழியரோடு வனத்தின் அழகைக் காணச் சென்றாள். காட்டின் நடுவில் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கு சில தேவ கன்னியர் பூஜை செய்து கொண்டிருந்தனர். அதில் ஒருத்தி சி த்திரகுப்த நயினாரின் கதையைப் படித்துக் கொண்டிருந்தாள். அதிசயமும் ஆச்சரியமும் அடைந்த கலாவதி வெளியில் காத்து நின்றாள். பூஜை முடிந் ததும் தேவகன்னியர் வந்தனர். அவர்களில் ஒருத்தி கலாவதியைப் பார்த்துவிட்டு அவள் அருகில் வந்தாள்.
தேவி! நீங்கள் அனைவரும் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? தேவ கன்னியர்களான நீங்கள் யாரை வழிபட்டீர்கள்? என்று பணிவாகக் கேட்டாள். அதற்கு அக்கன்னி, பெண்ணே! இன்று சித்திரா பவுர்ணமி. சித்திர குப்தனின் நாளான இன்று அவரது அவதாரக் கதையைப் படித்து விரதம் இருந்து பூஜிப்பவர்களுக்கு வாழ்வில் செல்வம் செழித்தோங்கும்; நல்ல கணவன், நல்ல குழந்தை என அரிய வாழ்க்கைக் கிடைக்கும். ஆண்கள் இதைச் செய் தால் எண்ணிய காரியங்களில் வெற்றியும், இனிமையான இல்லறமும் வாய்க்கும் என்றாள்.
உடனே கலாவதி அந்த பூஜை முறையை எங்களுக்கும் கற்றுத் தந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அந்த தேவகன்னியும் அவ்வாறே செய்தாள். அது முதல் கலாவதி சித்திர புத்திர நயினார் நோன்பைக் கடைப்பிடித்தாள். அதன் பலனாக ஆகமபுரியின் அரசன் வீரசேனனின் மனைவியாகும் பலனைப் பெற்றாள். சித்திரகுப்த நயினார் நோன்பு கடைப்பிடித்ததால் தான் தனக்கு செல்வச் செழிப்பும், புகழும் மிக்க வாழ்வு கிடைத்தது எனக் கருதி அந்த நோன்பை தரணியெங்கும் பரப்பினாள் கலாவதி.
பூஜை முறை:- சித்ரகுப்தனை வேண்டி பெரும்பாலும் பெண்களே விரதம் மேற்கொள்கின்றனர். சித்ரா பவுர்ணமி தினத்தில் இல்லத்தில் மாக்கோலம் போடுவார்கள். அதன் ஒரு பகுதியில் சித்திரகுப்தனை போலவே கோலம் போடுவார்கள். அருகில் ஏடும் எழுத்தாணியும் வைப்பார்கள். விளக்கு ஏற்றி வைத்து பூஜை செய்வார்கள். வெண் பொங்கல் இடுவதும் உண்டு.
இட்ட பொங்கலுடன் இனிப்பு கொழுக்கட்டை, மாங்காய் தட்டைப்பயறு குழம்பு இவைகளுடன், நீர், மோர், பழங்கள், கண் திறந்த இளநீர், பானம் இவைகளை வைத்து படைப்பார்கள். பலகாரங்களும் செய்து வைக்கலாம்.இவைகளை வைத்து படைத்து மதியத்திற்கு விரதம் இருப்பவர்கள் இவ்வுணவையே உட்கொள்வார்கள்.
சித்ரா பவுர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியும் (கொப்பி-பேனா) வைத்து, ஒரு பேப்பரில் "சித்திர குப்தன் படியளப்பு'' என்று எழுதி வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு தலை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும்.
படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள், தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும். தொடர்ந்து தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி வழிபட்டு பொங்கலை எல்லோருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும்.
சித்திர புத்திர நாயனார் கதை புராணம் ஆகியவற்றை படிப்பார்கள். காலையில் கோவிலுக்கு சென்று பிள்ளையார், நந்தி, சிவபெருமான் மூன்று தெய்வங்களுக்கும் அர்ச்சனை செய்து கொண்டு வருவார்கள். விரதம் இருப்பவர்கள் காலையில் குளித்தவுடன் பசுவுக்கு வெல்லம் கலந்த பச்சரிசி வைப்பார்கள். ஒரு வேளை தான் உணவு உட்கொள்ள வேண்டும்.
மறுமையில் நன்மை வேண்டுபவர்கள், மீண்டும் பிறவாமை வேண்டுபவர்கள், பிறப்பில் துன்பமிலா நற்பிறவி வேண்டும் என்பவர்கள் இந்த விரதத்தை அவசியம் கைக்கொள்ள வேண்டும்.
இந்த வழிபாட்டின்போது
"சித்திர குப்தம் மஹா ப்ராக்ஞம்
லேகனிபத்ர தாரிணம்
சித்ர ரத்னாம்பரதரம்
மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்''
என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
அன்று சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால்பூஜித்து வணங்கலாம். பானகம், நீர் மோர் போன்றவற்றை நிவேதனமாகப் படைத்து அருந்தலாம். மோரிலும் பசும்பாலில் எடுத்த மோர் கூடாது. மற்றொரு புராணத்தின்படி சித்திரகுப்தர் பசுவின் வயிற்றில் இருந்து அவதரித்தவர் என்பதால் சித்ராபவுர்ணமி அன்று எந்த வகையிலும் பசும்பால், பசுந்தயிர், பசுவெண்ணெய், பசுநெய் என்று எந்தப் பொருளையும் பூஜைக்கு எடுக்கவோ, உண்ணவோ கூடாது. அதேபோல அன்றைய தினம் உப்பையும் தவிர்ப்பது அவசியம். சித்திர குப்தரின் கதையையும், கலாவதி அந்த நோன்பை அனுசரித்துப் பயன் பெற்ற கதையையும் வீட்டில் உள்ள பெரியவர்கள் வாசிக்க மற்றவர்கள் கேட்க வேண்டும். சைவ உணவே உட்கொண்டு விரதத்தைக் கடைப்பிடித்தால் சித்திர குப்தரின் அருள் பூரணமாகக் கிட்டும் சீரான உடல்நலமும் செல்வச் செழிப்பும், நிறைந்த புகழ் மிக்க வாழ்வை சித்திர குப்தர் நிச்சயம் தந்தருள்வார். தென்னிந்தியாவில் மொத்தம் 11 இடங்களில் சித்திர குப்தருக்கு சன்னிதி இருந்தாலும் காஞ்சி புரத்தில் மட்டுமே தனியான கோயில் உள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.