அன்பினைக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உறுதி பூணுவோம் !

இயேசு கிறிஸ்து வகுத்த விடுதலைக்கு வழிகாட்டும் அன்பினைக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக்கொள்ள உறுதி பூணுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது ஈஸ்டர் பண்டிகை வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  
பிரதமர் தமது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது; 
சமூக, நீதி, மனிதாபிமானம், அன்பு என்பவற்றுக்காக தனது முழு வாழ்வினையும் அர்ப்பணிப்புச் செய்த இயேசுநாதர் மரித்து அந்த மரணத்தைத் தோற்கடித்து, உயிர்த்தெழுந்து உலகிற்கு கொண்டு வந்த விடுதலையின் செய்திகளை மீண்டும் நினைவூட்டும் பாஸ்கா பண்டிகையை முழு உலகிலுமுள்ள கிறிஸ்தவர்கள் மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகின்றனர். நாற்பது நாட்களாக இயேசுநாதர் துன்பப்பட்டமையினை நினைவுபடுத்தி மனம் வருந்தி, கடவுளிடம் வேண்டுதல், சமயக் கிரியைகள் மற்றும் புண்ணிய காரியங்களைக் கொண்டு அனுஷ்டிக்கும் கிறிஸ்தவர்கள், பெரிய வெள்ளியன்று சிலுவையில் அறையப்பட்டு இயேசு மரித்தமை மற்றும் பாஸ்கா ஞாயிறு தினத்தில் மரணத்திலிருந்து மீண்டும் உயிர்த்தெழுந்தமையினையும் நினைவுகூருகின்றனர்.
 
வறுமையினால் வாடுவோர், நோயாளிகள், பாவிகள், ஆதரவற்றவர்கள், சிறுபிள்ளைகள் என அனைவருக்கும் சமமான அன்பு செலுத்திய இயேசு நாதர் மானிட அன்பு, சமத்துவம், நல்லிணக்கம் என்பவற்றை விடவும் உயர்வான ஒன்று இந்த உலகில் இருக்க முடியாது என்பதை தனது முழு வாழ்க்கை ஊடாகவும் எடுத்தியம்பினார்.  
இன, மத, குல, கட்சி, வகுப்பு எனப் பிளவுபட்டு சண்டையிட்டுக் கொள்வதற்குப் பதிலாக இயேசுநாதர் காட்டிய விடுதலைக்கு வழிகாட்டும் அன்பினைக் கொண்டு வாழ்வினை அமைத்துக் கொள்ள உறுதிபூணுவோம்.
 
சகோதர கிறிஸ்தவ மக்களுக்கு அர்த்தம் பொதிந்த பாஸ்கா பண்டிகையாக அமையட்டும் என உளப்பூர்வமாக வாழ்த்துகிறேன். 
Powered by Blogger.