உலகமானது நல்லிணக்கத்தை நேசிக்கும் மனிதர்களாலேயே அழகு பெறுகின்றது!

புதியதோர் உலகைக் காணுவதற்கும் மானிடத்துவத்தைப் பற்றி மீள சிந்திப்பதற்கும் இந்த ஈஸ்டர் திருநாளில் நாம் அனைவரும் உறுதி கொள்வோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.  
உலகமானது நல்லிணக்கத்தை நேசிக்கும் மனிதர்களாலேயே அழகு பெறுகின்றதென அச்செய்தியில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.  
அச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இயேசு பிரான் மரணத்தை வெற்றி கொண்டதனைக் கொண்டாடும் உயிர்த்த ஞாயிறு தினமானது உலக வாழ் கிறிஸ்தவ மக்களால் ஓர் புனித பண்டிகையாக கொண்டாடப்படுகின்றது. ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னரான தவக் காலத்தில் விரதம் அனுஷ்டித்து தியாகங்களையும் சமய வழிபாடுகளையும் அவர்கள் மேற்கொள்கின்றனர்.  
மானிட வர்க்கத்திற்காக தமது உயிரை நீத்த இயேசு பிரான், மரணத்தின் போது அனுபவித்த வேதனைகளை நினைவுகூருவதன் மூலம் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை அனுஷ்டிக்கின்றனர்.
இயேசு பிரானின் உயிர்த்தெழுதலின் மூலம் பக்தர்களின் மனத்தில் மகிழ்ச்சியை ஈஸ்டர் பண்டிகையை வெளிப்படுத்துகின்றது.
மரணத்தில் காணப்படுகின்ற இம்சையையும், குரோதத் தன்மையையும் கடந்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்து வாழ்க்கையினை பற்றிக்கொள்வதன் அபூர்வமான மகிழ்ச்சியை ஈஸ்டர் பண்டிகையை வெளிப்படுத்துகின்றன.
அத்தோடு தெய்வீகத் தியாகத்தைப் பற்றிய ஒப்பற்ற அர்ப்பணிப்பையும் இத் திருநாள் வெளிப்படுத்துகின்றது.  
எல்லா உயிரினங்களும் இம்சித்தல் மற்றும் தாக்கங்களுக்கு உட்படுத்துதலை வெறுக்கின்றன. சகலவித தோற்றங்களும் உயிர்ப்பினில் இருந்தே பிறக்கின்றன.
ஒவ்வொருவருக்கும் எதிராக ஏந்தப்படும் சகலவித ஆயுதங்களும் தீமையின் கட்டளையினாலேயே எழுகின்றன. அதனால் அவற்றுள் குரோதத்தினதும் வைராக்கியத்தினதும் தீச்சுவாலையே தேங்கியிருக்கின்றது.
  
இந்த உலகமானது பாசமும் அந்நியோன்ய பிணைப்பும், கௌரவமும், நல்லிணக்கத்தை நேசிக்கும் மனிதர்களினாலேயே அழகு பெறுகின்றது. அத்தகையதொரு சுவர்க்கத்தினை நோக்கிய பாதையை உயிர்த்த ஞாயிறு தினமே திறந்து வைக்கின்றது.
அவ்வழியில் பயணிப்பதன் மூலம் புதியதோர் உலகைக் காண்பதற்கும் மானிடத்துவத்தைப் பற்றி மீளச் சிந்தித்துப் பார்ப்பதற்கும் இந்த ஈஸ்டரின் மூலம் நாம் அனைவரும் உறுதி கொள்வோமாக, 
சகல கிறிஸ்தவ பக்தர்களுக்கும் அர்த்தமுள்ள சமாதானமான ஈஸ்டர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 
Powered by Blogger.