முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளரை மனநோய் மருத்துவரிடம் பரிசோதிக்க உத்தரவு!

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவா மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசாரணைப் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி இருவரையும் மனநல வைத்திய நிபுணர்களிடம் காட்டி அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் ரங்க திஸாநாயக்க நேற்று சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டார். இச் சம்பவத்துடன் தொடர்புடைய ஊழியர்கள் பெருமளவிலானோர் மனநோய்க்குள்ளாகியுள்ளதாகவும் அவர்களை மனநல வைத்தியரிடம் காட்டுமாறும் சந்தேக நபர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதிமன்ற வேண்டுகோளை கருத்திற்கொண்டு மஜிஸ்திரேட் மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சந்தேக நபர்கள் இருவரும் முன்னர் வகித்த பதவிகளுக்கிணங்க அவர்கள் செயற்பட்டுள்ள விதம் தொடர்பில் பார்க்கும் போது சிறைச்சாலைகளில் உள்ள சந்தேக நபர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உட்பட்டிருக்கலாமெனவும் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேற்படி விடயங்களை கருத்திற்கொண்டுள்ள மஜிஸ்திரேட் நீதிபதியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நீதிமன்ற மருத்துவ அறிக்கைக்கிணங்க சந்தேக நபர்கள் இனியும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற வேண்டிய அவசியம் கிடையாது என தெரிவித்தார். அவர்களை நீதிமன்ற மருத்துவ அதிகாரியொருவர் மூலமாக மனநல மருத்துவரிடம் காட்டுமாறும் தெரிவித்துள்ளதுடன் அவரிடமிருந்து அறிக்கையொன்றை பெற்று நீதிமன்றத்துக்குச் சமர்ப்பிக்குமாறும் சிறைச்சாலை அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இடம்பெற்றுள்ள மேற்படி சம்பவத்தின் பிரதான சந்தேக நபரின் மனைவியை துப்பாக்கியுடன் அவர்களது வீட்டுக்குச் சென்ற குழுவொன்று மரண அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த விசாரணை அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் கொழும்பு மேலதிக மஜிஸ்திரேட் ரங்க திஸாநாயக்க நேற்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணை நேற்று கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் இவர்கள் இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் 26 பேர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் 11 கொலைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மேற்படி இருவரும் கடந்த ஏப்ரல் 03 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
2012 ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை இடம்பெற்றதுடன் அது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விசாரணைகளிலிருந்து கிடைத்துள்ள தகவல்களுக்கிணங்கவே மேற்படி இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
சட்டமா அதிபரின் விசேட அனுமதி பெற்றப்பட்ட பின்னரே இவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுத்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நேற்றைய விசாரணையின் போது இவர்கள் இருவரையும் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.