புனித விசாகப் பூரணை நோன்மதித் தினம் இன்று!

புனித விசாகப் பூரணை நோன்மதித் தினம் இன்றாகும் .'மனிதன் உயர்வதும் தாழ்வதும் பிறப்பால் அன்றி அவனது செயலாலேயே ஆகும்' என்பதே புத்தர் அருளிய போதனையின் அடிநாதமாகும்.

 எனவே, இந்த புனிதமான விசாக தின வைபவத்தில் புத்த பெருமான் அருளினால் உலக வாழ் பௌத்த மக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 குரோத மனம் மீது கருணையை ஏற்படுத்தி, உயிரினங்கள் மீது அளவற்ற அன்புடன் மனிதனின் அறிவை மலரச் செய்து வாழ்க்கையின் விமோசனத்தை அடையும் வழியை உணர்த்திய புத்தரின் குணங்களை விசாக பூரணை தினம் நினைவுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதேவேளை, சிறந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

 சமூகத்தின் நலனை அடிப்படையாகக் கொண்டு பௌத்த தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும் என தமது வாழ்த்துச் செய்தியில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 இதேநேரம், விசாக பூரணை பண்டிகையை கொண்டாடும் பௌத்தர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 புத்தபிரான் காலடி எடுத்துவைத்த இந்தப் பூமியில் யுத்த மோதல்கள் மற்றும் துயர்கள் அற்ற வகையில், அனைத்து இன சமூகங்களுக்கும் சமமான உரிமைகள் மற்றும் நீதி நியாயம் என்பன கிடைக்கப் பெறுகின்ற நிலையான சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு அனைவரும் அணி திரள வேண்டும்.

 சமாதானம் மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய சகவாழ்வின் ஒளியின் ஊடாக புனித விசாக தினத்தில் தேசத்தை மெருகூட்டுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

 இந்த முறை விசாக பண்டிகையை முன்னிட்டு நாடாளாவிய ரீதியாக 2 ஆயிரத்து 625 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 தானசாலைகள் நடத்தப்படும், பகுதிகளில் இன்றும், நாளையும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொது சுகாதார மருத்துவர் சங்கத்தின் செயலாளர் பி.எம்.எம் பால சூரிய எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.

 இதேவேளை, தானசாலைகள் பதிவு செய்யப்படுவது அத்தியாவசியமானது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
Powered by Blogger.