அஜித் படத்தில் நடிக்கிறாரா ஆர்.கே.சுரேஷ்?

சிவா இயக்கத்தில் அஜித் – நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் ‘விஸ்வாசம்’ படத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
`விவேகம்’ படத்தை தொடர்ந்து அஜித்தும், சிவாவும் ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம் நான்காவது முறையாக இணைந்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் 23-ந் தேதி துவங்க இருந்த நிலையில், படஅதிபர்கள் போராட்டத்தால் படப்பிடிப்பு தொடங்காமல் இருக்கிறது.
தயாரிப்பாளர்கள் சங்க ஸ்டிரைக் முடிவுக்கு வந்த பிறகு, படப்பிடிப்பு துவங்குவது குறித்த அறிவிப்பு வெளியாகும். இதற்கிடையே இந்த படத்தில் பணியாற்றவிருக்கும் கலைஞர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
ஏற்கனவே அஜித் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் ஒப்பந்தமாகி இருக்கும் நிலையில், நடிகர் ஆர்.கே.சுரேஷும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதை ஆர்.கே.சுரேஷ் மறுத்தார்.
தற்போது இயக்குனர் சிவாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே.சுரேஷ். இதனால், ரசிகர்கள் அஜித் படத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார் என்று பேசி வருகிறார்கள். இதில் ஒரு ரசிகர் வில்லனாக நடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு இல்லை என்று கூறியிருக்கிறார். ஆனால், படத்தில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர். 
Powered by Blogger.