CID அதிகாரிக்கு இலஞ்சம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கின் உண்மை விளம்பல் விசாரணை இன்றும் நடைபெற்றது.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.வை.எம். இஸர்டீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேகநபரான பிரதீப் மாஸ்டர் என்றழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஷ்ணானந்தராசாவிடம் அரச தரப்பு சட்டத்தரணி மாதவ தென்னகோன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரின் அறிவுறுத்தலுக்கு அமையவே, கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 4 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வாக்குமூலமளித்ததாக சந்தேகநபரான பிரதீப் மாஸ்டர் கூறியுள்ளார்.

தொப்பிகல பயிற்சி முகாமில் இருந்து பிள்ளையானின் வேண்டுகோளுக்கு அமைய 10 பேருடன் மட்டக்களப்பிற்கு சென்று அரசியல் கட்சி ஆரம்பித்தீர்களா என அரச தரப்பு சட்டத்தரணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த சந்தேகநபர், என்ன நடந்தது என தமக்கு தெரியாது எனவும் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி கூறியதற்கமைய விரைவில் விடுதலையாகும் நோக்கில் அவ்வாறு வாக்குமூலமளித்ததாகவும் கூறியுள்ளார்.

சாந்தன் என்பவரை தெரியுமா என சந்தேகநபரிடம் வினவப்பட்டபோது, தமக்கு தெரியாது என அவர் பதிலளித்துள்ளார்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் காத்தான்குடியில் சுட்டுக்கொல்லப்பட்ட சாந்தனை தெரியுமா என அரச தரப்பு சட்டத்தரணி இதன்போது மீண்டும் வினவியுள்ளார்.

அவரைத் தெரியாது என பதிலளித்த சந்தேகநபரான பிரதீப் மாஸ்டர், சாந்தன் என்ற ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதை தாம் அறிந்திருந்ததாக பதிலளித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தம்மையும் கஜன் மாமாவையும் வேன் ஒன்றில் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு அழைத்து வந்த சந்தர்ப்பத்தில் அவருடன் உரையாடவில்லை எனவும் சந்தேகநபர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட அரச தரப்பு சட்டத்தரணி, அந்தக் கருத்து உண்மைக்கு புறம்பானது என சுட்டிக்காட்டியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4 ஆம் திகதி கைது செய்யப்படுவதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டு ஜுலை 28 ஆம் திகதி மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரி நாதன் என்பவருக்கு இரண்டு இலட்சம் ரூபா இலஞ்சம் கொடுத்ததை ஏற்றுக்கொள்கின்றீர்களா என சந்தேகநபரிடம் சட்டத்தரணி வினவினார்.

அதனை மறுத்த சந்தேகநபர், அந்த சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்படவுள்ளதை அறிந்து முன்கூட்டியே பொலிஸாருடன் கதைத்து 5 இலட்சம் ரூபா வழங்குவதாக வாக்குறுதியளித்து முற்பணமாக 2 இலட்சம் ரூபாவை சந்தேகநபர் கொடுத்ததாக ஏற்கனவே வாக்குமூலம் அளிக்கப்பட்டிருந்ததை அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

சந்தேகநபரான பிரதீப் மாஸ்டர் தாம் செய்த தொழில் தொடர்பிலும் மன்றில் பொய் கூறுவதாக சட்டத்தரணி ஆதாரங்களுடன் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

தொப்பிகலயில் வைத்து லெப்டினன்ட் கேர்ணல் என்ற பதவி வழங்கப்பட்டதா என சந்தேகநபரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.

இதுவும் சந்தேகநபரின் பொய் என அரச தரப்பு சட்டத்தரணி மாதவ தென்னக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கின் மூன்றாவது சந்தேகநபரான கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தொடர்பில் பிரதீப் மாஸ்டரிடம் விசாரணை நடத்துவதற்கு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் மேலதிக உண்மை விளம்பல் விசாரணை ஜுன் மாதம் 13 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரான பிரதீப் மாஸ்டரிடம் தொடர்ந்தும் விசாரணை நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.