தெருவுக்கு 10 பேராவது வந்தால்தான் கட்சி!

அரசியல் களத்தில் தீவிரமாக இறங்கியுள்ள நடிகர் ரஜினிகாந்த், தனது ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக மாற்றியுள்ளார். அதற்கான உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி நேற்று முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் ரஜினிகாந்த் பேசியதாகக் கூறப்படுவதாவது….

நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று நீங்கள் தொடர்ந்து வற்புறுத்தியதால்தான் அரசியல் கட்சி தொடங்க சம்மதித்தேன். இதை தமிழக மக்களுக்கும் தெரிவித்துவிட்டோம்.

அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்டு 4 மாதங்கள் ஆகியும், ரஜினி கட்சி தொடங்கவில்லை என பலரும் பேசுகிறார்கள். இந்தத் தாமதத்துக்கு நான் காரணம் அல்ல. நீங்கள்தான் காரணம். தமிழகம் முழுவதும் உள்ள 65 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 30 பேர் வீதம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்று உங்களிடம் கூறியிருந்தேன். அந்தப் பணியை நீங்கள் இன்னும் முடிக்கவில்லை. தற்போது வரை 30 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன.

ரசிகர் மன்ற பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு கட்சி தொடங்கினால் அரசியலில் நிலைத்து நிற்க முடியாது. ஆட்சியைப் பிடித்த பிற கட்சிகள் போல, நம் கட்சிக்கும் வலுவான அடித்தளம் இருக்க வேண்டும். அப்போதுதான் நாம் அரசியலில் சாதிக்க முடியும். தெருவுக்கு 10 பேராவது இருந்தால்தான் பிரச்சாரம் செய்ய முடியும்.

நம் கட்சிக்கு சுமார் 2 கோடி வாக்காளர்களை உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும் என்பது இலக்காக இருக்க வேண்டும். இதை நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எனவே, மக்கள் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கும் பணியை நீங்கள் தீவிரப்படுத்த வேண்டும். சுமார் 75 சதவீத பணிகள் முடிந்தால்தான் கட்சியை அறிவிப்பேன். நீங்கள் இப்பணியை எப்போது முடிக்கிறீர்களோ, அடுத்த நாளே கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கத் தயாராக இருக்கிறேன். கட்சி தொடங்கும் அந்த நாளில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஊர்களிலும் நம் கட்சிக் கொடி ஒரே நேரத்தில் பறக்க வேண்டும். ஒரு மாதம் அவகாசம் வழங்குகிறேன். அதற்குள் நான் சொன்னதுபோல, 75 சதவீத பணிகளை முடிக்க வேண்டும்.

மக்களை இணைக்க வேண்டும் என்பதற்காகவே ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றினேன். ரஜினி மக்கள் மன்றம்தான் கட்சியாக மாறப் போகிறது. மன்றப் பணிகளை சிறப்பாக செய்பவர்களுக்கே கட்சியில் பதவி வழங்கப்படும்.

அதற்காக, ‘நான் ரசிகர் மன்றத்தில் நீண்ட நாட்களாக இருக்கிறேன்’ என்று சொல்லிக்கொண்டு யாரும் பதவி கேட்டு என்னிடம் வரவேண்டாம். மன்றத்தில் நிர்வாகியாக அல்லாத உறுப்பினர் ஒருவர் சிறப்பாக பணியாற்றினால்கூட, அவருக்குதான் பதவி வழங்கப்படும். அதேபோல, சரியாக மன்றப் பணி செய்யாதவர்கள், பொறுப்பில் இருந்து உடனே நீக்கப்படுவார்கள்.

தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் இணக்கமான உறவு நிலவுகிறது. இதனால், அதிமுக ஆட்சி தடங்கலின்றி 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும் என்றே கருதுகிறேன். இந்த காலகட்டத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரும். அதுபற்றி நாம் இப்போது கவனம் செலுத்தப் போவதில்லை. அடுத்த தமிழக சட்டப்பேரவை தேர்தல்தான் நம் இலக்கு.

இவ்வாறு ரஜினிகாந்த் பேசியதாக நிர்வாகிகள் கூறினர்.

ரஜினியின் இந்தப் பேச்சு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிவித்து நான்கு மாதங்கள் ஆகியும் 30 சதவீத பணிகள்தாம் முடிந்திருக்கின்றன. எப்போது 75 சதவீத பணிகள் முடிவது இவர் எப்போது கட்சி ஆரம்பிப்பது என்கிற அதிருப்திக் குரல்களை கேட்க முடிந்தது. 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.