20: திருத்தச் சட்டமூலத்தால் ஜனநாயகம் , பாதுகாப்பு என்பன பாதிக்கப்படும்!

ஜே.வி.பியினால் முன்மொழியப்பட்டிருக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஸ்திரத்தன்மை, ஜனநாயகம் மற்றும் நாட்டின் பாதுகாப்பு என்பன பாதிக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
தேர்தல் முறை மாற்றத்தைக் கொண்டுவராமல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இல்லாமல் செய்வதற்கு தாம் இணங்கப்போவதில்லையென்றும் கூறினார். ஜனாதிபதிக்கு இருந்த அதிகூடிய அதிகாரங்கள் 19ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக குறைக்கப்பட்டுள்ளன.
ஜே.வி.பி முன்மொழிந்திருக்கும் 20ஆவது திருத்தச்சட்டமூலத்தில் பெயரளவிலான ஜனாதிபதிமுறை பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் இருப்பதுடன், ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தெரிவுசெய்யப்படுபவராக இருப்பார். இது பாரியதொரு மாற்றமாகும். இது சர்வஜன வாக்கெடுப்பிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக இருக்க வேண்டும். அது மாத்திரமன்றி சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லும் அரசியலமைப்பு மாற்றமொன்றுக்குச் செல்லப்போவதில்லையென ஜனாதிபதி உறுதிமொழி வழங்கியிருப்பதாகவும் கூறினார்.
பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் சம்பிக்க ரணவக்க இதனைக் குறிப்பிட்டார்.
மாகாண ஆளுநர்களை நியமிப்பது உள்ளிட்ட விடயங்களில் ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை. இருந்தபோதும் பெயரளவில் இருக்கும் ஜனாதிபதியால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்படும்.
Powered by Blogger.