அரசாங்கம் எமக்கு அடிமையா??

அரசாங்கம் தனது கட்டளைகளால் எம்மை அடிமைப்படுத்த முடியாது என்பதை இந்த தொழிலாளர் தினத்தில் நிரூபித்துள்ளோம் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேதினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘பௌத்த பிக்குகளின் சொல் கேட்டு நடக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திபால சிறிசேனவின் அறிவிப்பை நாம் ஏற்காமல் மிகவும் கவனமாகவும் பக்குவமாகவும் இந்த மேதினக் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளோம்.

தந்திரோபாயத்துடன் வடக்கு கிழக்கு முழுவதும் நாம் துணிவுடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த மேதினக் கொண்டாட்டங்களின் ஊடாக நாம் போராட்ட வழியில் வந்தவர்கள் என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றோம்.

இலட்சக்கணக்கில் உயிர்களைப் பலிகொடுத்த மக்கள் வெறுமனே பேரினவாதத்தின் அதிகாரத்திற்குள் அடங்கிப் போவார்கள் என்பது அல்ல. எமது இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் அரசாங்கத்தின் அடக்குமுறைகளும் கட்டளைகளும் எம்மை அடிமைப்படுத்தாது என்பதுடன், நாம் அடுத்தகட்ட நகர்விற்கான உத்திகளைக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதையே இப்போராட்டங்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன.

எதிர்காலத் தலைமைத்துவத்தை விடுதலை உணர்வுடன், சுதந்திரம் கொண்டவர்களாகவும், தமது மண்ணிலே ஆளப்பிறந்தவர்களாகவும் எமது சந்ததியை உருவாக்குவதற்கு இந்தத் தொழிலாளர் தினத்தில் நாம் திடசங்கர்ப்பம் கொள்ளவேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார். 
Powered by Blogger.