காலம் காலத்திற்கு காலம் சில தலைவர்களை இனம் காட்டும்!

பிரபாகரன் என்ற கடவுளுக்குப் பின்னர் மீண்டும் காலம் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் வாயிலாக ஒரு தலைவரை இனம் காட்டியிருக்கிறது. அவர் தான் மாமனிதர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். இந்தத் தலைவன் பின்னால் நாம் அணிதிரளாமல் பின்வாங்கினால் தமிழர் தேசம் சிங்கள தேசமாகும். சிங்கள தேசத்தின் கனவு நனவாகும். அதனைத் தடுக்க வேண்டுமானால், தமிழர் தாயகத்தை நாங்கள் மீட்க வேண்டுமாகவிருந்தால், எங்களுடைய அபிலாசைகளை அடைய வேண்டுமானால் எமது தலைவனின் பின்னால், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பின்னால் அணிதிரள்வது தான் எங்களுக்கிருக்கின்ற ஒரே வழி எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக் கோட்டைத் தொகுதி அமைப்பாளரும், பிரபல சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் முழக்கமிட்டுள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து நடாத்திய தொழிலாளர்தின எழுச்சி நிகழ்வு யாழ்.நல்லூர் கிட்டுப் பூங்கா வளாகத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(01) பிற்பகல் நடைபெற்ற போது கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு முழக்கமிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

காலம் காலத்திற்கு காலம் சில தலைவர்களை இனம் காட்டும். அந்தவகையில் கடந்த 1940 ஆம் ஆண்டுகளில் இனம் காட்டிய தலைவர் தான் ஜீ.ஜீ. பொன்னம்பலம், ஜீ.ஜீ பொன்னம்பலத்திற்குப் பின்னர் காலம் தந்தை செல்வநாயகத்தை இனம் காட்டியது.

அந்த இரண்டு தலைவர்களிற்குப் பின்னர் தமிழ்த்தேசியத்திற்குத் தலைமை தாங்குவதற்கு ஒரு கடவுளை இனம் காட்டியது. அவர் தான் தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை மேதகு பிரபாகரன்.எங்களுடைய கொள்கை ஒரு நாடு இரு தேசம். அந்தக் கொள்கையை விளங்காதவர்களும் இன்றைய மேதினத்தின் வாயிலாக எங்கள் கொள்கைகளை விளங்கிக் கொள்ளலாம்.

இலங்கை ஒரு நாடு. அதிலே இரண்டு தேசங்கள் காணப்படுகின்றன.ஒன்று சிங்கள தேசம் மற்றையது தமிழ்த்தேசம். இன்றைய தினம் இடம்பெற்றுக் கொண்டிருப்பது தமிழ்த்தேசத்தின் மேதினம் .எதிர்வரும் -07 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை சிங்களத் தேசத்தின் மேதினம்.

கூட்டமைப்பின் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், அண்ணன் சிறிதரன் போன்றவர்கள் ஒரு நாடு இரு தேசம் என்றால் என்ன? நாட்டுக்கும், தேசத்திற்கும் என்னையா? வித்தியாசம் எனக் கேட்டார்கள்.

இன்றைய தினம் நாமும், 07 ஆம் திகதி சிங்கள தேசமும் மேதினத்தைக் கொண்டாடுகின்றோமே அதுதான் ஐயா வித்தியாசம்.

ஆகவே, இன்றைய எங்களுடைய மேதினம் எங்களுடைய கொள்கையை இந்த உலகத்திற்குக் காட்டியிருக்கின்றது. ஈழ தேசத்திற்கு காட்டியிருக்கின்றது. கொள்கை விளங்காத கூட்டமைப்பினருக்குக் காட்டியிருக்கின்றது.

சந்தேகப்பட்டவர்களுக்கும், குழப்பமடைந்தவர்களுக்கும் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் சில தெளிவான பதில்களை வழங்கியிருக்கின்றன. சந்தேகத்தைத் தெளிவுபடுத்தியிருக்கின்றது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
Powered by Blogger.