ஆனந்தசுதாகரனின் பிள்ளைகளுக்கு உதவி!

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் மறக்கப்பட்டு வருகின்றனர்.

 இரண்டு குழந்தைகளுடன் தனது கணவனின் விடுதலைக்காக போராடி வந்த, அவரது மனைவி யோகராணி கடந்த மார்ச் மாதம் நோயுற்ற நிலையில் உயிரிழந்தார்.

 தாயை இழந்து விட்ட நிலையிலும், தந்தை இருந்தும் அவரது அரவணைப்பில் வாழ முடியாத நிலையிலும் இரு பிள்ளைகள் தற்போது தவித்து வருகின்றனர்.

 இந்த நிலையில், குறித்த பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யுமாறு பொதுமக்கள், பொது அமைப்புக்கள் என்பன இணைந்து கையெழுத்துப்பேராட்டம் போன்றவற்றை மேற்கொண்டனர்.

 ஆயினும் இதுவரையில் ஆனந்தசுதாகரன் விடுதலை செய்யப்படவுமில்லை அவர்களது பிள்ளைகளின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படவுமில்லை.

 குறித்த பிள்ளைகளுக்கு பல்வேறு உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தன, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயும் பிள்ளைகளுக்கான உதவியை வழங்கியிருந்தார்.

 அத்துடன், காரைநகர் வியாவில் ஐயனார் தேவஸ்தானம் அமைப்பினர் குறித்த பிள்ளைகளுக்கு நேற்று 50 ஆயிரம் ரூபா பண உதவியினை வழங்கியுள்ளனர்.

Powered by Blogger.