மதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடு செப்டெம்பர் மாதம்!

மதிப்பீடுகள் தொடர்பான சர்வதேச மாநாடான 'இவால் கொழும்பு' (Eval Colombo) மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது.
செப்டெம்பர் மாதம் 17ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரையான காலப் பகுதியில் கொழும்பு ஹில்டன் ஹோட்டல் மற்றும் பாராளுமன்றம் ஆகியவற்றில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
மதிப்பீடுகள் தொடர்பான உலக பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 100ற்கும் அதிகமான பிரதிநிதிகள் உள்ளிட்ட மதிப்பீடுகள் குறித்த துறைசார் நிபுணத்துவம் பெற்ற பலர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடொன்று பாராளுமன்ற குழு அறையில் நேற்று நடைபெற்றது. இதில் மதிப்பீடுகள் தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி, அதன் உறுப்பினர்களான மயந்த திசாநாயக்க, மயில்வாகனம் திலகராஜ், புத்திக பத்திரண மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி மற்றும் இலங்கை மதிப்பீட்டாளர் சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் சமன் பண்டார ஆகியோர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துக்களை முன்வைத்தனர்.
பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது போதிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படாமையால் பொது மக்களின் பணம் வீண்விரயமாகிறது. எனவேதான், மதிப்பீடுகள் குறித்து நாடு முழுவதிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இது தொடர்பில் தேசிய கொள்கைத்திட்டமான்றைத் தயாரிக்கும் நோக்கில் பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மதிப்பீட்டுக் குழுவொன்று அமைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டார்.
இந்தக் குழு மாவட்டங்கள் தோறும் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் மத்தியில் விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதுடன், மதிப்பீடுகள் குறித்த தேசிய கொள்கைத்திட்டமொன்றை தயாரிக்கும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் மதிப்பீடுகள் தொடர்பான தேசியக் கொள்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்து, செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் மதிப்பீடுகள் குறித்த சர்வதேச மாநாட்டுக்கு முன்னர் அதனை அங்கீகரிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.
மத்தள விமானநிலையம் மற்றும் உமா ஓயா போன்ற பாரிய வேலைத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் உரிய மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனாலேயே திட்டங்களை அமைப்பதில் பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளவேண்டி ஏற்பட்டது. எனவேதான், மதிப்பீடு தொடர்பான தேசிய கொள்கையொன்றை தயாரிக்க எதிர்பார்த்திருப்பதாக ஆனந்த குமாரசிறி எம்பி தெரிவித்தார்.
மதிப்பீடுகள் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்மேளனத்தின் தலைவராக அமைச்சர் கபீர் ஹாசிம் செயற்பட்டு வருகிறார். 2013ஆம் ஆண்டு அவருடைய முயற்சியின் கீழ் குழுவொன்றை அமைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டன. எனினும், 2017ஆம் ஆண்டே இதற்கான குழுவை அமைக்க முடிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2015ஆம் ஆண்டு மதிப்பீடுகள் தொடர்பான பாராளுமன்ற உறுப்பினர்களின் மாநாடு நேபாளத்தில் நடைபெற்றுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் மதிப்பீடுகள் தொடர்பான 'கொழும்பு பிரகடனம்' வெளியிடப்படவுள்ளது.
நேற்றைய ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த திலகராஜ் எம்பி குறிப்பிடுகையில், தற்போதைக்கு அக்கறையுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் தன்னார்வ குழுவாக செயற்பட்டு வருகிறோம். இத்தகைய குழுக்கள் சர்வதேச ரீதியாக பல நாடுகளில் செயற்பாட்டில் உள்ளன. இதன் தற்போதைய தலைவராக அமைச்சர் கபிர் ஹாசிம் உள்ளார். இத்தகைய குழுக்கள் செயற்படும் சுமார் 100 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கு பெறும் மூன்று நாள் மாநாடு பாராளுமன்றுக்கு வெளியேயும் உள்ளேயும் இடம்பெறவுள்ளது என்றார்.
இந்த மதிப்பீட்டு செயன்முறையை பாராளுமன்றத்தில் நிலையான குழு (standing committee) ஒன்றை அமைக்கும் செயன்முறை இடம்பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி கருத்துத் தெரிவிக்கையில், பாரிய நிதி முதலீட்டுடன் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சரியான முறையில் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை மதிப்பீடுகள் மூலம் அறிந்து கொள்ள முடியும். 
குறிப்பாக நன்கொடையாளர்களால் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதைவிட, தேசிய மதிப்பீடுகளை மேற்கொள்வது காலத்தின் தேவையாகும். மக்களின் பணத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் பூர்த்தியடைந்த பின்னர் அதனை கணக்காய்வுக்கு உட்படுத்துவதைவிட, குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் ஆரம்பத்திலேயே மதிப்பீட்டை மேற்கொள்வது சிறந்தது. எனவேதான் மதிப்பீடு தொடர்பான விழிப்புணர்வை நாடு முழுவதிலும் மேற்கொண்டிருப்பதாக அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.