எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் இந்த வாரத்தினுள் ரணில் முடிவை அறிவிப்பார்!

மாகாண சபைத் தேர்தலுக்கான எல்லை நிர்ணய அறிக்கை தொடர்பில் சுதந்திரக் கட்சியுடன் பேசி இந்த வாரத்தினுள் பிரதமர் முடிவு அறிவிக்க இருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய நேற்று பராளுமன்றத்தில் தெரிவித்தார்.பிரதமரின் முடிவை அடுத்த கூட்டத்தில் அறிவிப்பதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டார்.

மாகாண சபை தேர்தல்கள் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருவது தொடர்பில் ஒன்றிணைந்த எதிரணி எம்.பிக்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

3 மாகாண சபைகளுக்கான  தேர்தல்கள் 8 மாதங்கள் கடந்தும் இன்னும் நடைபெற வில்லை. மேலும் 3 மாகாண சபைகளின் காலம் நிறைவடைய இருக்கின்றன. கடந்த மார்ச் மாதத்தில் எல்லை நிர்ணய அறிக்கையை மாகாணசபைகள் அமைச்சர் சமர்ப்பித்திருந்தார். ஆனால் அரசாங்கம் தேர்தல் நடத்தாது காலங்கடத்தி வருகிறது என டளஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தல் சட்டம் கடந்த மாதத்தில் நிறைவேற்றப்பட்டு தேர்தல் நடந்தாலும் இந்த சட்டத்தை மாற்ற வேண்டும் என ஜனாதிபதி உட்பட பலரும் கூறியுள்ளனர்.

மாகாண சபை தேர்தல்களை ஒத்திவைக்க கூடாது என உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.இருந்தும் அரசாங்கம் தொடர்ந்து தேர்தலை பின்போட்டு வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்குப்பதிலளித்த சபாநாயகர், இந்த விடயம் தொடர்பில் பிரதமருடன் பேசினேன். கட்சித் தலைவர் கூட்டங்களிலும் இது தொடர்பில் ஆராயப்பட்டன. சுதந்திரக் கட்சியுடன் பேச வேண்டியிருப்பதாக பிரதமர் அறிவித்துள்ளார். இந்த வாரத்தினுள் பிரதமர் இறுதி முடிவு வழங்குவார் என நம்புகிறேன் என்று கூறினார்.
Powered by Blogger.