லங்கா சதொசவில் மண்ணைப் பெற்றவர்களுக்கு சிக்கல்!

மன்னார் லங்கா சதொச விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து அகழ்வு செய்யப்பட்ட மண்ணை பெற்றுக்கொண்ட மக்கள் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்து, மண்ணை ஆய்விற்கு உற்படுத்துமாறு சட்ட வைத்திய நிபுணர் ஏ.எஸ்.ராஜபக்ச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 மன்னாரில் இன்று மதியம் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது,

 மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டடம் அமைக்க  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த  லங்கா சதொச  விற்பனை நிலையத்தின் வளாகத்தில் உள்ள மண் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.

பொது மக்கள் குறித்த மண்ணினை கொள்வனவு செய்து தமது வீடுகளில் கொட்டிய போது, மனித எலும்புத்துண்டுகள் வெளி வந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பில் குறிப்பிட்ட சிலர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தனர்.

 கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகளினால் கூறப்பட்டமைக்கு அமைவாக மன்னார் நீதவான் மார்ச் மாதம் 28 ஆம் திகதி அங்கு சென்று பார்வையிட்டுள்ளார். குறித்த மண் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போது மனித எலும்புகள் குறித்த மண்ணில் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

 அதனைத்தொடர்ந்து மனித எலும்புகள் மீட்கும் பரிசோதனைகள் அழைக்கப்பட்ட அதிகாரிகளின் கீழ் கட்டம் கட்டமாக இடம் பெற்று வருகின்றது.

 மன்னார் நீதவானின் முன்னிலையில் அவரின் கட்டளைக்கு அமைவாக குறித்த அகழ்வு பணிகள் தற்போதும் இடம் பெற்று வருகின்றன. அழைக்கப்பட்ட திணைக்களங்களில் இருந்து வருகை தந்தவர்கள் குறித்த அகழ்வு பணிகளை முன்னெடுத்துச் செல்லுகின்றனர்.

 குறித்த அகழ்வை முழுமைப்படுத்த வேண்டியுள்ளது. எனவே மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து உடைக்கப்பட்டு புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த லங்கா சதொ விற்பனை நிலைய வளாகத்தில் இருந்து மண்ணை மக்கள் ஏற்கனவே பெற்றுள்ளனர்.

 மக்கள் தமது வீடுகளுக்கு போட்டுள்ள குறித்த மண்ணினையும் ஆய்வு செய்ய வேண்டிய நிலை உள்ளது. எனவே குறித்த மண்ணையும் ஆய்வு செய்யும் போதே உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

 குறித்த வளாகத்தில் இருந்து மண்ணை பெற்றவர்கள் உடனடியாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து குறித்த மண்ணையும் ஆய்வு நவடிக்கைகளுக்கு உற்படுத்த வேண்டும். இதன் மூலமே குறித்த மண்ணில் என்ன இருக்கின்றது என்பது தொடர்பில் மக்களுக்கு தெரிவிக்க முடியும்.- என்றார்.

Powered by Blogger.