விருந்தோம்பல் பண்பில் யாழ்ப்பாணம் முதலிடம்!

ஒவ்வொரு இனத்தவர்களும், தாம் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தில் இருப்பதனால் தான், இன, மத மொழி ரீதியான வன்முறைகள் இடம் பெறுகின்றன. கலாசாரத்தையும், பண்பாட்டையும் பயன்படுத்தி, இனங்களுக்கிடையில் நட்புறவுப் பாலத்தினை ஏற்படுத்த வேண்டும்.

 இவ்வாறு உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.  வடமராட்சி கரவெட்டி பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட கலாசார மத்திய நிலைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,

எமது கலாசார பாரம்பரியங்களைப் பேணிப்பாதுகாக்காவிடின், உலகத்தில் தனிப்பட்டவர்களாக தெரிவோம். எமது நாட்டில் உள்ள பாரம்பரிய கலாசாரங்கள் வேறு நாட்டில் காணப்படவில்லை. அந்தளவிற்கு எமது நாட்டில் பாரம்பரிய கலாசாரங்கள் காணப்படுகின்றன. எம்மத்தியில் வெவ்வேறான காலாசாரங்கள் உள்ளன. வெவ்வேறான சமய பண்பாடுகள், பழக்கவழங்கள் இருக்கின்றன. இவை அனைத்தும் நாம் ஒதுங்கிச் செல்வதற்கான காரணங்களாக இல்லாமல், சேர்ந்து வாழ்வதற்கான காரணங்களாகக் காணப்படுகின்றன

வந்தோரை விருந்தோம்பல் கொடுத்து வரவேற்பதில் முதன்மையானது யாழ்ப்பாணம். துரதிஸ்டவசமாக கடந்த காலங்களில் இணைந்து செயற்பட முடியாத சூழ்நிலை. அதையிட்டு நான் வருத்தமடைகின்றேன். அன்றைய காலங்களில் இருந்த சூழ்நிலைகளை விட இன்றைய காலங்களில் நிலமை வித்தியாசமடைந்தாலும், அன்றைய காலத்தில் இருந்த மக்களை விட தற்போதுள்ள மக்கள் வித்தியாசமடைந்தாலும், அன்றைய காலங்களில் இருந்த மக்களின் விரும்தோம்பல் போன்றே இன்றும் காணப்படுகின்றது.

இந்து கடவுள்கள் பௌத்த ஆலயங்களில் இருக்கின்றன. அந்த தெய்வங்கள் உள்ள இடங்களை நீங்கள் கோவில் என்று அழைக்கின்றீர்கள், நாங்கள் விஹாரை என அழைக்கின்றோம். எமக்கு கலாசாரம் மிகவும் முக்கியமானது. கலாசாரத்தினையும் பண்பாட்டினையும் பின்பற்றும் மக்கள், அந்த கலாசாரத்தினையும் பண்பாட்டினையும் பயன்படுத்தி இனங்களுக்கிடையிலான நட்புறவுப் பாலத்தினையும் ஏற்படுத்த வேண்டுமென்பதற்காகவே, நாங்கள் அனைவரும் மேற்கத்திய கலாசாரத்தினைப் பின்பற்றி வருகின்றோம்.

5000 வருடங்களுக்கு முற்பட்ட வேதங்களில் நன்மை தீமைகளை இணங்கண்டு, அவற்றை கடைப்பிடிக்க வேண்டுமென்றே எமது சமூகத்திற்கு எடுத்துக்காட்டுகின்றன. பௌத்த சமயமும் அவற்றினையே கூறுகின்றது.

இந்த உலகத்தில் வெவ்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. மத ரீதியான, இன ரீதியான, மொழி ரீதியான வன்முறைகள் ஏற்படுவதற்கு ஒரு காரணமே உள்ளன. ஒவ்வொரு இனத்தவர்களும் தமக்குள்ளே தாம் மற்றைய இனத்தவர்களை விட உயர்வானவர்கள் என எண்ணுகின்றார்கள். வேறு சிலர் தாம் மற்றைய இனத்தினை விட தாழ்ந்தவர்கள் என இவ்வாறான சிந்தனைகளே உலகில் இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளன.

எமது இனம், மத எதுவாக இருந்தாலும், நாம் இந்த நாட்டில் அனைத்து மதத்தவர்களையும், இனத்தவர்களையும் மதித்து, கலாசாரத்தினையும் மதித்து பின்பற்றி நடக்க வேண்டுமென்பதே எமது நோக்கம்.

எனவே, நாம் எமது கலாசார பாரம்பரியத்தினைப் பின்பற்றுவதற்காகவும், மேம்படுத்துவதற்காகவும், இன்றைய கலாசார மத்திய நிலையத்துடன், 7 கலாசார மத்திய நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் நிறுவகிக்கப்பட்டுள்ளன.

 இன்னும் சில மாதங்களில் யாழ்ப்பாணத்தில் இரண்டு கலாசார மத்திய நிலையங்களை யாழ்.மாவட்டத்தில் திறந்து வைக்க இருப்பதுடன், எதிர்காலத்தில் ஏனைய 6 பிரதேச செயலக பிரிவிற்கும் கலாசார மத்திய நிலையத்தினை நிறுவகிக்கப்படுமென்று எதிர்பார்க்கின்றேன்.

 இப்பிரதேச மக்களின் பொருளாதாரத்தினைக் கட்டி எழுப்புவதற்கும், கல்வி நடவடிக்கைகளை மற்றும் கலாசார நடவடிக்கைகளை மேம்படுத்தவும் பாதுகாப்பதற்கும், நாடளாவிய ரீதியில் பொறுப்புக்கூறுகின்றோம்.

 ஒற்றுமையை செயற்படுத்துவதற்கு சில சில பிரச்சினைகள் இருந்தாலும், இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையை உருவாக்குவார்கள் என்று எண்ணுகின்றேன் என்றார்.

Powered by Blogger.