விசேட நீதிமன்ற திருத்த சட்டமூலம் இன்று சபையில் சமர்ப்பிப்பு!

விசேட நீதிமன்றத்துக்கான திருத்தச் சட்டமூலம் இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள நேற்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் திருத்தச் சட்டமூலத்திற்கூடாக ஆகக்கூடியது மூன்று விசேட நீதிமன்றங்களை உருவாக்க முடியும். எனினும் முதற்கட்டமாக மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசேட நீதிமன்றம் நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
இச் சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் பட்சத்தில் பிரதம நீதியரசர் விரும்பினால் நாளை மறுதினம் முதலே விசேட நீதிமன்றத்தை நடைமுறைப்படுத்த முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
விசேட நீதிமன்றத்தில் நாள் தோறும் வழக்குகளை விசாரித்து ஆகக்குறைந்தது ஒரு மாதத்தில் ஒரு வழக்குக்கான தீர்ப்பை வழங்க முடியுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் திருத்தச் சட்டமூலத்திற்கூடாக ஆகக்கூடியது மூன்று விசேட நீதிமன்றங்களை உருவாக்க முடியும். எனினும் முதற்கட்டமாக மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசேட நீதிமன்றத்தை நடைமுறைக்கு கொண்டுவர இருக்கின்றோம். இங்கு நீதிபதிகள் நினைத்தவாறு வழக்குகளை ஒத்திவைக்க முடியாது. நாள்தோறும் வழக்குகள் விசாரிக்கப்படும் என்றும் கூறினார்.
ஏற்கனவே விசாரணையிலுள்ள வழக்கு அல்லது இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாத வழக்கு என எந்தவொரு வழக்கும் விசேட நீதிமன்றத்திற்கூடாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாமென சுட்டிக்காட்டிய அமைச்சர், அது இலஞ்ச ஊழல் வழக்காகவோ அல்லது குற்றறவியல் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்காகவோ இருக்க முடியுமென்றும் தெரிவித்தார்.
நீதிமன்ற திருத்தச் சட்டமூலத்தில் முன்வைக்கப்பட்ட 12 ஏ (1), (2), (7) ஆகிய சரத்துக்கள் அரசியலமைப்பின் 13ஆவது சரத்துடன் முரண்படுவதாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகள் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தலதா அத்துக்கோரள நேற்று குறிப்பிட்டார்.
அமைச்சர் இங்கு மேலும் தெரிவித்ததாவது, -
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னரே நாம் இத்திருத்தச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட்டோம். எனினும் இதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு காரணமாகவே இதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் கால தாமதம் ஏற்பட்டது. சட்டத்தரணிகள் சங்கம் ஆரம்பத்தில் இதனை எதிர்த்தபோதும் பின்னர் இதற்கு இணக்கம் தெரிவித்தனர்.
விசேட நீதிமன்றம் மூலம் இந்த அரசாங்கம் பலரை பழிவாங்கப் போவதாக பலர் அஞ்சுகின்றனர். உண்மையில் அவ்வாறு இல்லை. குற்றம் செய்தவர்களுக்கு மாத்திரமே இதில் தண்டணை வழங்கப்படுமே தவிர இதன்மூலம் எவரையும் பழிவாங்க முடியாது என்றும் அமைச்சர் கூறினார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் டொக்டர். ராஜித சேனாரத்ன, ஜனாதிபதி தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்தமையையிட்டு மகிழ்ச்சியடைவதாக கூறினார்.
ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன், மிக் விமானக் கொள்வனவு, எக்னெலிகொட உள்ளிட்ட பல வழக்குகளின் சாட்சியங்களும் தடயங்களும் காணாமற்போயுள்ளன. இவை விசேட நீதிமன்றம் மூலம் துரிதப்படுத்தப்படும். அத்துடன் மத்திய வங்கி முறி விவகாரம் மற்றும் ஜனாதிபதி செயலக பிரதானி இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டு ஆகிய சம்பவங்களும் இதில் விசாரிக்கப்படக்கூடும். விசாரிக்கப்படும் வழக்குகளை பிரதம நீதியரசரே தீர்மானிப்பார் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.