பிரித்தானிய ரக்பி வீரர் இலங்கையில் மரணம்!

பிரித்தானிய ரக்பி வீரர் ஒருவர் மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் கவலைக்கிடமான நிலையில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர், ஹாவட் தோமஸ் அன்ட்ரூ எனும் 26 வயதான ரக்பி வீரர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த 10 ஆம் திகதி இலங்கை வந்த 22 வீரர்கள் உள்ளடங்கிய பிரித்தானிய ரக்பி அணி, கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற சிநேகபூர்வ ரக்பி போட்டியில் பங்குபற்றியதோடு, அங்கு இடம்பெற்ற இரவு விருந்திலும் கலந்துகொண்டுள்ளனர்.
இதனையடுத்து, அவர்கள் தங்கியிருந்த சுற்றுலா விடுதிக்கு திரும்பியதோடு, மீண்டும் அங்கிருந்து கொள்ளுபிட்டியிலுள்ள இரவு விடுதி ஒன்றில் பொழுதை கழித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
நேற்று (13) அதிகாலை, இரு வீரர்களுக்கு மூச்சு விட கடினமான நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஹோட்டல் முகாமைத்துவ ஏற்பாட்டில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்தே குறித்த இருவருள் ஒருவர் மரணமடைந்துள்ளார். பெட் தோமஸ் ரீட் எனும் 27 வயதான பிரித்தானிய வீரர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவரின் சடலம், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, பிரேத பரிசோதனை இன்றைய தினம் (14) மேற்கொள்ளப்படவுள்ளது.
கொழும்பு கோட்டை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Powered by Blogger.