முள்ளிவாய்க்காலில் ஒன்றிணையுங்கள்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் இனவழிப்பு நினைவேந்தல் நிகழ்வுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குங்கள் என காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி, இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “பல்கலைக்கழக மாணவர்கள் எங்கள் தமிழ் உறவுகள் அழிக்கப்பட்ட நினைவு நாளினை நினைவிற்கொள்ள முன்வந்து அதற்கான அழைப்பினை விடுத்துள்ளார்கள்.

இந்த நிகழ்வினை நடத்தும் மாணவர்களுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.

மே-18 அன்று தமிழ் மக்கள் ஒன்றிணைந்து ஒரே இடத்தில் எமது தமிழ் உறவுகளுக்காக நினைவேந்தலை மேற்கொள்ள வேண்டும். தமிழர்களின் ஒற்றுமையினைப் பலப்படுத்துவதற்கு அழிக்கப்பட்ட எம் தமிழ் உறவுகளுக்காக சுடர் ஏற்றவேண்டும் .

தமிழ் மக்கள் அழிக்கப்பட்ட ஒரே இடத்தில் தமிழர்கள் ஒற்றுமையினைக் காட்டவேண்டும். எனவே அரசியல் சார்ந்தவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்கள், மற்றும் பொது மக்கள் என அனைவரும் ஓரிடத்தில் அணிதிரளுங்கள்” என்று தெரிவித்தார்.
Powered by Blogger.