முன்னாள் போராளிகளில் கடனை மீளச் செலுத்த முடியாதவர்கள் தொடர்பில் விசேட வேலைத்திட் டம்!

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூக மயப்படுத்தப்பட்ட இளைஞர், யுவதிகளுக்கு வழங்கப்பட்ட கடனை; மீளச் செலுத்த முடியாதவர்கள் தொடர்பில் தமது அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இவ்வாறு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அதிகார சபையினால வழங்கப்பட்டதாக கூறப்படும் கடனை இரத்து செய்வதற்கு அல்லது புனர்வாழ்வு அதிகார சபையின் மூலமாக ஓர் ஏற்பாடு செய்து வங்கிக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க முடியுமா? என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சர் டி. எம். சுவாமிநாதனிடம் 27ஃ2 நிலையியற் கட்டளையின் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா நேற்ற சபையில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் சுவாமிநாதன் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவுற்ற பின்னர் 2012ஆம் ஆண்டு சமூகமயப்படுத்தப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு புனர்வாழ்வு அதிகார சபையின் ஊடாக சுயதொழில் கடன் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், இந்தக்கடனுக்காக 4 வீத நிவாரண வட்டிவீதமும், ஒரு வருட சலுகைக்காலமும் வழங்கப்பட்டது. கடனை மீளச் செலுத்துவதற்கான ஆகக்கூடிய காலமாக பத்து வருடங்கள் வழங்கப்பட்டன. இலங்கை வங்கி, மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு ஆகியவற்றின் ஊடாக இந்தக் கடன் வழங்கப்பட்டது. புனர்வாழ்வு அதிகார சபையின் ஊடாக இக்கடன் திட்டத்துக்கு 8 வீத வட்டி நிவாரணம் வழங்கப்பட்டது. கடன் வழங்கும்போது பயனாளிகளுக்கு கடன்திட்டம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டதுடன், விண்ணப்பித்தவர்களுக்கு இரண்டு பிணைதாரர்களின் கையொப்பத்துடனேயே கடன் வழங்கப்பட்டது.

இவ்வாறான நிலையில் வறுமை மற்றும் குறைந்த பொருளாதாரம் கொண்ட குடும்ப சூழ்நிலையால் பலர் இந்தக் கடன்களை மீளச் செலுத்த முடியாதுள்ளனர். எனினும், வங்கிகள் தமக்குரிய சட்டத்திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கத் தொடங்கியுள்ளன.

 இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் குறிப்பாக தனது அமைச்சு கவனம் செலுத்தியிருப்பதுடன், திறைசேரியுடன் கலந்துரையாடி இவர்களுக்கு விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவிருப்பதாகவும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மேலும் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.