இலங்கையில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு!

2018 மார்ச் மாதத்திற்கான உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 0.1% இனால் அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அந்த அறிக்கை பின்வருமாறு,

வெளியிடப்பட்ட கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் (IIP) பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின் மார்ச் மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 2018 மார்ச் மாதத்திற்கான உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 0.1% இனால் அதிகரித்துள்ளதென திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. ஏ.ஜே. சதரசிங்க இந்தச் சுட்டெண்னை வெளியீடு செய்யும் உத்தியோகபூர்வ வெளியீட்டு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண்ணானது 2018 மார்ச் மற்றும் 2017 மார்ச் மாதங்களில் முறையே 110.3 மற்றும் 110.1 எனப் பதிவாகியுள்ளது.

தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களமானது கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் உள்ளடங்கலாக பல்வேறு பொருளாதாரக் குறிகாட்டிகளைத் தயாரித்து வெளியீடு செய்கின்றது. இந்தக் குறிகாட்டிகள் பொருளாதார முன்னேற்றத்தை அடையாளம் காண்பதற்கு, பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் பிரதான துறைகளை அடையாளம் காண்பதற்கு, பொருளாதாரத்தின் செயற்றிறனை மதிப்பீடு செய்வதற்கு, கொள்கை வகுப்பாக்கம் மற்றும் மதிப்பீட்டிற்கு அரசினைப் போன்று கைத்தொழில் நிறுவனங்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. அதற்கமைய குறிப்பிட்ட காலப்பகுதிக்கமைவாக தரப்பட்ட காலப்பகுதிக்குள் பொருளாதாரத்தின் கைத்தொழில் துறையின் தன்மையினை கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் மூலம் அடையாளம் காணமுடியும்.

2017 மார்ச் மாதத்தின் மாதாந்த உற்பத்திக் கொள்ளளவுடன் ஒப்பிடுகையில் 2018 மார்ச் மாதத்திற்கான 'அடிப்படை உலோக உற்பத்திகள்', 'மரம் மற்றும் மரம் சார்ந்த உற்பத்திகள்' மற்றும் 'பானவகை' என்பனவற்றில் முறையே 29.4%, 18.1% மற்றும் 16.6% என குறிப்பிடக்கூடிய அதிகரிப்புப் பதிவாகியுள்ளது. 2018 மார்ச் மாதத்திற்கான உணவு உற்பத்தியானது 3.2% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

கைத்தொழில் துறையில் உள்ளடங்கும் 'மின் உபகரண உற்பத்திகள்', 'அடிப்படை மருந்துப் பொருள் உற்பத்திகள்' மற்றும் 'லெதர் உற்பத்தி மற்றும் லெதர் தொடர்பான உற்பத்திகள்' என்பவற்றில் முறையே 16.4%, 15.5% மற்றும் 15.2% வீழ்ச்சி பதிவாகியுள்ளது. மேலும், 'கோக் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகள்' 61.4% வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. பராமரிப்பு சேவைகளின் காரணமாக இக்கைத்தொழில் மூடப்பட்டமையினால் வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. உற்பத்திக் கைத்தொழில்களில், 2017ம் ஆண்டு முதலாம் காலாண்டு உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் 2018 முதலாம் காலாண்டு உற்பத்தி 1.6% ஆல் அதிகரிப்பைக் காட்டுகின்றது.

Powered by Blogger.