தமிழர் தாயகம் எழுச்சி பெறவேண்டும்!

தமிழின அழிப்பு நினைவேந்தல் அன்று
தமிழர் தாயகம் எழுச்சி பெறவேண்டும்
-தமிழர் சமஉரிமை இயக்கம் வலியுறுத்தல்-

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்காலில் மட்டும் நடத்தப்படவேண்டும் என்றில்லை. மாறாக, அது தமிழர் வாழும் பகுதிகளான வடக்கு, கிழக்கு, மலையகம் எங்கும் அனுஷ்டிக்கப்படவேண்டும். மே – 18 ஆம் திகதி தமிழர் தேசம் எழுச்சிபெறவேண்டும். அந்த எழுச்சிப் பிரவாகத்தில் நின்றவாறு, தமிழினப் படுகொலைக்கு சர்வதேசத்திடம் நீதி கோரவேண்டும். இதுவே தமிழர் சமஉரிமை இயக்கத்தின் நிலைப்பாடாகும்.

இவ்வாறு, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு தமிழர் சம உரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர்களான வலி.மேற்கு பிரதேச சபை உறுப்பினர் ந.பொன்ராசா, வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர் தா.நிகேதன் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழினப் படுகொலைக்கான நினைவேந்தல் நிகழ்வு தமிழ் மக்களை வேதனைப்படுத்தும் நிகழ்வாகவோ சிங்கள தேசத்தை சிரிக்கவைக்கும் நிகழ்வாகவோ அமையக்கூடாது. தமிழர்களிடத்தே இருக்கின்ற ஒற்றுமையீனமே தமிழர்களின் போராட்டம் தோற்றுப்போனமைக்கு முக்கிய காரணமாகும். எனவே, இப்போதாவது நாம் விழிப்படையாவிட்டால் எப்போதுமே எமது இனத்தைக் காப்பாற்ற முடியாது.

எமது நிலம் தினந்தோறும் சுவீகரிக்கப்படுகின்றது. எமது கலை, பண்பாடு, கலாசாரம் என்பன திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. தமிழ் இளைஞர்களின் எதிர்காலம் தென்னிலங்கைச் சக்திகளால் சீரழிக்கப்படுகின்றது.

ஆனால், எது எப்படிப் போனாலும் பரவாயில்லை நாம் அரசியல் நடத்துவோம், எமது பலத்தை வெளிப்படுத்துவோம் என தமிழ் அரசியல் கட்சிகள் செயற்படுகின்றன. உண்மையிலேயே இது வெட்கப்படவேண்டிய, வேதனைப்படவேண்டிய விடயம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வானது தமிழினப் படுகொலையை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்கும் முக்கியமான நாள். இங்கு நடைபெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோருவதற்கான முக்கிய தருணம். தமிழின விடுதலைப் போராட்டத்தில் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான மக்களின் ஆன்மா சாந்திக்கான ஒரு உணர்வுபூர்வப் பிரார்த்தனைக்கான நாள்.

அது தமிழர் தேசம் அழுவதற்கான நாள் அல்ல, மாறாக தமிழினம் எழுச்சியடைவதற்கான நாள். அன்றைய நாளில் ஓட்டுமொத்த தமிழர் தேசமும் எழுச்சியடைந்து ஊர்களில் இருக்கின்ற பொது இடங்கள், ஆலயங்கள் அல்லது வீடுகளுக்கு முன்பாக பெரும் தீபம் ஏற்றி அங்கு நின்றவாறே தமிழினப் படுகொலைக்கு உணர்வுபூர்வமாக நீதி கோர முடியும். ஆன்மீக ரீதியிலும் அந்த சக்தி உலகின் மனச்சாட்சியை உலுக்கும்.

அதை விடுத்து, வீரம் செறிந்த முள்ளிவாய்க்கால் மண்ணில் நின்று நான் பெரிது நீ பெரிது என வாதிட்டு தனிப்பட்ட அரசியல் நடத்துவதற்கு அரசியல் கட்சிகள் முண்டியடிப்பது வெக்கக்கேடானது. அரசியல் கட்சிகளின் தற்போதைய செயற்பாடானது இதுதான் தமிழர்களுக்கான விடுதலை அரசியலா என்ற கேள்வியை எழுப்புகின்றது.

எனவே, தமிழின அழிப்பு நாளான மே – 18 ஆம் திகதி தமிழர் தேசம் எழுச்சியடைந்து, தமிழ் மக்களுக்கான நீதியைக் கோர முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகள், பல்லைக்கழக மாணவர் சமூகம், பொது அமைப்புக்கள் மற்றும் ஏனைய தரப்புக்களிடம் தமிழர் சமஉரிமை இயக்கம் கோரிக்கை விடுக்கின்றது. – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Powered by Blogger.