சீனா- இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையைச் செய்வதற்கு பேச்சுவார்த்தை !

சிங்கப்பூருடனான புதிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அந்நாட்டுக்கு அளவிற்கு மீறிய நன்மையை ஏற்படுத்தும் என்ற கருத்தை மறுத்துள்ள மூலோபாய அபிவிருத்தி, சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, இந்த உடன்படிக்கை, இலங்கைக்கே கூடுதலான வருமானத்தையும் தொழில் வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
"எமது நாட்டின் தொழில்வாண்மையாளர்கள் உட்பட கூடுதலானோருக்குத் தொழில் வாய்ப்புகளை இந்த உடன்படிக்கை ஏற்படுத்தும்" என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலக வர்த்தக மையத்தில் உள்ள அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (04) அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இந்தப் புதிய உடன்படிக்கையின் மூலம் சிங்கப்பூர் பிரஜைகள் சுதந்திரமாக இலங்கையில் தொழில்வாய்ப்புக்களைப் பெற முடியும் என்ற குற்றச்சாட்டு ஓர் அப்பட்டமான பொய் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
எனினும், நிபுணர்களுக்கும் சிரேஷ்ட முகாமைத்துவத் துறையினருக்கும் வரையறைக்கு உட்பட்ட காலப்பகுதிக்கான தொழில் விசாவைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தச் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அனுமதிக்கிறது என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, இந்த உடன்படிக்கை அமைச்சரவையின் அங்கீகாரமின்றிக் கைச்சாத்திடப்பட்டதாகக் கூறப்படுவதை நிராகரித்த அமைச்சர், அவருக்கு கைச்சாத்திடுவதற்கு அதிகாரமளித்த அமைச்சரவை தீர்மானத்தைச் சுட்டிக்காட்டித் தெளிவுபடுத்தினார்.
மேலும், ஆசியான் நாடுகள் குறைந்த வரி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்வதற்காக இலங்கைக்குச் செல்லும் ஒரு பிரவேச வழியாக சிங்கப்பூரைப் பயன்படுத்தும் என்ற கவலையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் பிரதான அனுசரணையாளரான கே.ஜே.வீரசிங்க இதனை மறுத்துள்ளார்.
வெளிநாட்டு நேரடி முதலீடு தொடர்பாக விரிவாகக் கருத்து தெரிவித்த அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அரசாங்கத்தின் வர்த்தக தாராளமயக் கொள்கையின் காரணமாக கூடுதல் நன்மைகள் வெளிப்படுவதாகக் குறிப்பிட்டார்.
"கடந்த ஆண்டு 1.9 பில்லியன் டொலர் முதலீட்டைப் பெற்றிருந்தோம்.அதனை இந்த ஆண்டில் 2.5 பில்லியன் டொலராக அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்". "இது எமது அரசாங்கத்தின் கொள்கைகள் சர்வதேச சமூகத்தினால் சிறப்பாக வரவேற்கப்படுவதுடன் ஏற்றுமதியாளர்களும் வரவேற்கின்றனர்" என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கம் தற்போது சீனாவுடனும் இந்தியாவுடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையைச் செய்வதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்த அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, தாய்லாந்துடனான சாத்தியப்பாடுகள் பற்றி ஆராய்ந்து வருவதாகவும் குறிப்பிட்டார். "நாம் இப்போது சரியான பாதையில் பயணிக்கின்றோம்" என்றும் அமைச்சர் கூறினார்.

No comments

Powered by Blogger.