நாளை அக்னி நட்சத்திரம் ஆரம்பம்.!

அக்னிநட்சத்திரம் தொடங்க உள்ள நிலையில், அனல் கக்கும் வெயிலால் பொதுமக்கள் வெளியே வரமுடியாமல் வீடுகளில் முடங்கினர்.
மதுரையில் நேற்று வெயில் 104 டிகிரியைத் தாண்டியது. இதனால், பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடுகின்றன. கோடையின் உச்சமான அக்னி நட்சத்திரம் நாளை (மே 4) ஆரம்பமாகிறது. ஆனால், அதற்கு முன்னரே கத்தரி வெயில் கோரத் தாண்டவமாடுகிறது. கடந்த சில மாதங்களாக மதுரையில் மழையும் இல்லை. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 104 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது. வெயில் கொடுமையால் அனல் காற்று வீசுகிறது. நேற்று முன்தினம் 102 டிகிரி கொளுத்திய வெயில் நேற்று 104 டிகிரியை தாண்டியது. வீதிகளில் மக்கள் தலை காட்ட முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.

பெண்கள் குடையுடனும், டூவீலரில் சென்ற பெண்கள் தலையில் துணியை சுற்றியபடியும் சென்றனர். மதுரை கோரிப்பாளையம் உள்ளிட்ட பல சந்திப்பில் சிக்னலுக்காக டூவீலரில் காத்து நின்ற சிலர், வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். குளிர்பான கடைகளிலும், சாலையோரங்களில் மோர், ஐஸ் சர்பத், கம்மங்கூழ், குளிர் பதநீர், இளநீர், தர்பூசணி விற்பனை அமோகமாக விற்பனையில் நடக்கிறது. அக்னி நட்சத்திரம் மே 4ம் தேதி தொடங்கும் நிலையில் தென்மேற்கு பருவமழைக்கான ஆரம்ப அறிகுறியாக குளிர்ந்த காற்று வீசும். ஆனால், அதற்கான அறிகுறி இன்னும் தோன்றவில்லை. எனவே, பருவமழை தாமதமாகும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.