முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நிகழ்வு என்பது வெறும் சம்பிரதாய நிகழ்வு அல்ல!

முதலமைச்சர் விக்கிக்கேஸ்வரன் ஐயா அவர்களுக்கு!

ஐயா! நீங்கள் ஒரு போராளி அல்ல என்பதும் ஆனால் மக்களின் நியாயங்களை மற்ற அரசியல் ஏமாற்றுவாதிகளை விட உண்மையாக சொல்ல கூடியவர் என்பதும் எமக்கு தெரியும். அதனாலேயே உங்களை தமிழ் மக்கள் நாம் மதிக்கின்றோம்.
ஆனால் அந்த மதிப்பை தமிழ் மக்கள் உணர்வை மிதித்து அழித்து விடாதீர்கள்!

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நிகழ்வு என்பது வெறும் சம்பிரதாய நிகழ்வு அல்ல!

அது இறந்தவர்கள் மேல் சத்தியம் எடுத்து கொள்ளும் உன்னத நிகழ்வு!

அது அரசியல் அல்ல நீங்கள் புகுந்து விளையாடுவதற்கு! அது போராட்டத்திற்கான உறுதி மொழி எடுக்கும் வலி சுமந்த உணர்வுக்கான பொழுதுகள் நிறைந்த நிகழ்வு!


முள்ளிவாய்க்கால் நிகழ்வில் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் ஓரிடத்தில் ஒற்றுமையாக! நிகழ்வை நினைவு கூறுவதில் தமிழினம் ஒன்றுபட்டு போராடும் வல்லமையை பெற வேண்டும்!
அதை ஒழுங்கமைக்கும் சக்தி போராடும் மக்களுக்குள் மட்டுமே உண்டு!

முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு என்பது நெருப்பு! அதனோடு எவரும் எதிர் அரசியல் நாடகமாடி விளையாடாதீர்கள்!
"போராடும் மக்களின் பின்னாலும், போராடும் மாணவர்கள் பின்னாலும் மட்டுமே நீதிக்காக போராடும் தமிழினம் அணிதிரள வேண்டும்!"

உங்களை போன்ற நல்ல அரசியல்வாதிகள் மக்களுக்காக குரல் கொடுங்கள். வரவேற்கின்றோம். ஆனால் இறந்த தமிழர்கள் பிணங்களில் எவரும் எதிர் அரசியல் செய்யாதீர்கள் என தாழ்மையாக வேண்டுகின்றேன்.

உங்களை ஏவுகின்றவர்களிடம் விழிப்பாக இருங்கள். மாணவர்கள் முன்னெடுக்கும் நிகழ்வுக்கு நீங்களும் ஆதரவு நல்கி ஒற்றுமையாக தமிழினம் இந்நிகழ்வை நிகழ்த்த உறுதுணையாக இருப்பதே உங்களுக்கு அழகு.

தமிழர் இனஅழிப்பு நினைவு நிகழ்வை முள்ளிவாய்க்காலில் நிகழ்த்த மாணவர்கள் எடுத்த முடிவுக்கு வீதியில் இறங்கி இராப்பகலாக போராடும் மக்கள் ஆதரவளித்த நிலையில் அரசியல் முலாம் இன்றி நடக்க வேண்டும் எனவும் மக்களும் மாணவர்களும் விரும்பும் நிலையில் வடமாகாண சபையின் திடீர் நிகழ்வு பற்றிய அறிக்கை அதிர்ச்சி தருகின்றது. அதிலும் உங்களிடம் இருந்து வருகின்ற பொழுது வேதனைப்படுகின்றோம்.


மாணவர்கள் முன்னெடுத்த நிகழ்வு சிலகாலமாக அவர்கள் இதற்காக அறிக்கைகளும் விடுத்து முன்னேற்பாடுகளை செய்தும் வருகின்றார்கள். அதை நீங்களும் அறிவீர்கள். அப்போ வராத அறிக்கை திடீர் என இப்போ வருவது ஏன்?

திடீர் என அவர்களை எதிர்த்து வடமாகாண சபை அறிக்கை விடுகின்றது. முதலமைச்சர் நீங்களும் அவர்களோடு சேர்ந்து முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நிகழ்வை வடமாகாண சபை நடத்தும் என்கின்றீர்கள். அதிர்ச்சி அடைகின்றோம்.

கயிற்றில் நடப்பது போன்று தான் மக்களுக்காக உழைக்கும் பணி என்பதை மறந்து விடாதீர்கள். மக்களை எவரும் தூக்கி எறிந்தால் மக்கள் ஈவு இரக்கம் இன்றி தூக்கி எறிவார்கள்.


ஐயா முதலில் இனப்படுகொலைக்கு நீதி வேண்டும் போராட்டத்தை முனைப்போடு நடத்துங்கள். அதுவே முள்ளிவாய்க்கால் நினைவு வணக்கத்திற்கான முதன்மை பணி.

இதுவரையில் அந்த குரல் கொடுப்பு பணியை நேர்மையாக உண்மையாக செய்து வருகின்றனர் என்பதால் தான் உங்களை மதித்து இதனை எழுதுகின்றேன்.


அரசின் கட்டமைப்பில் இருக்கும் எவருக்கும் எங்கள் மக்களின் இனப்படுகொலை நிகழ்வை உணர்வு பூர்வமாக உண்மையாக போராட்ட எழுச்சி வடிவமாக நினைவு கூற ஒருபோதும் முடியாது.
எனவே போராடும் மக்கள் கையிலும் மாணவர்கள் கையிலும் நிகழ்வை விட்டு விடுங்கள் தயவு செய்து!

ஊழல்கள் குற்றச்சாட்டுகள் என உங்களுக்கு வடமாகாண சபை பார்க்க வேண்டிய ஏராளம் வேலைகள் உண்டு. அதை பாருங்கள்.
வேண்டுமானால் நிகழ்வில் பங்கேற்று மக்களோடு மக்களாக நின்று ஆதரவு கொடுங்கள் நேர்மையாக. அதுவே உங்களுக்கு அழகு.
இதே போல் வடமாகாண சபை அங்கத்தவர்கள் இதர அரசியல் தலைவர்கள் எல்லோரையும் எச்சரிக்கிறேன். மாணவர் நிகழ்வை எவர் குழப்பினாலும் அவர்களுக்கு எதிராக அவர்கள் வண்டவாளங்கள் தண்டவாளம் ஏறும் வகையில் எம் மக்கள் எதிர்ப்பு இருக்கும்!

மக்கள் மாணவர்கள் பின்னாலும் போராடும் மக்கள் பின்னாலும் மட்டுமே நிற்பதே சரி.

மக்களின் உணர்வுகளை மதிக்கும் வரையில் மட்டுமே எவரும் மதிக்கப்படுவார்கள்.

நீங்கள் தமிழ் மக்கள் உணர்வுகளை மதிப்பவர் எனவே இந்த விடயத்திலும் மதிப்பீர்கள் என எதிர்பார்க்கின்றேன்.

முள்ளிவாய்க்கால் மக்களின் நினைவோடு போராடி கொண்டிருப்பவர்கள் வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள்,

மண்மீட்புக்காக போராடி கொண்டிருப்பவர்கள் கேப்பாபிலவு, இரணைதீவு போன்ற நிலமீட்பு போராட்ட மக்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என போராடியவர்கள் அனைத்து மக்களுக்காகவும் பல தடைகள் தாண்டி இந்நிகழ்வுக்காக போராடும் யாழ் பல்கலை கழக மாணவர்கள் போன்றோர்களே எங்கள் முதன்மை போராட்ட சக்தி.
யாழ் பல்கலை கழக மாணவர்கள் வணங்க தூபி கட்டிய பொழுது தடை விதித்த அரசை தட்டி கேட்காத ஊழல்களும் சிக்கல்களும் நிறைந்த அரச முகமான வட மாகாண சபைக்கு என்ன அருகதை உண்டு முள்ளிவாய்காலுக்காக நினைவு நிகழ்வை உள்ளசுத்தியோடு முன்னெடுத்து நடத்த? வடமாகாண சபை மேல் உள்ள மக்கள் பணத்தின் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு முதலில் பதில் சொல்லுங்கள்.
போராடும் மக்களின் பின்னாலும் இளைஞர்கள் பின்னாலும் மட்டுமே நீதிக்காக போராடும் தமிழினம் அணிதிரள வேண்டும்.
தமிழர்கள் நாம் இந்த விடயத்தில் மாணவர்களை மதித்து பின்பற்ற விரும்புகின்றோம். அரசியல்வாதிகள் முதலில் அரசுக்கு எதிராக போராடட்டும். தமிழினஅழிப்புக்கு நீதி பெற்று கொடுக்கட்டும்.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி உலக சமூகத்திற்கு நல்லாட்சி அரசின் கீழ் தமிழினம் அனுபவிக்கும் கொடுமைகளை உங்களை போல் மற்றவர்களும் எடுத்து சொல்லட்டும்.
ஆனால் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவு கூறும் நிகழ்வை முன்னெடுக்க போராடும் மக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு!

புரிந்து கொண்டு உங்கள் முடிவை மாற்றுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன் ஐயா!
ஈழ தமிழச்சி
வலி சுமந்து வாழும் தமிழர்களில் ஒருத்தி
சிவவதனி பிரபாகரன்
Powered by Blogger.