முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் மறுத்த சிவாஜிலிங்கம்!

எதிர்வரும்-18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பகுதியில் அனுஷ்டிக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் ரெலோ அமைப்பின் தேசிய அமைப்பாளரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எம்.கே. சிவாஜிலிங்கம் வினாவிய போது அவர் கருத்துக்கள் எதனையும் கூற மறுத்துவிட்டார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) முன்னாள் தலைவர் அமரர் ஸ்ரீ சபாரத்தினம் மற்றும் போராளிகளின் 32 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (06) முற்பகல்-10 மணி முதல் யாழ்.கோண்டாவில் அன்னங்கை கோகிலா வீதி தோட்டவெளியிலுள்ள ஸ்ரீ சபாரத்தினம் உயிர்நீத்த நினைவிடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட எம்.கே. சிவாஜிலிங்கத்திடம் எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வடமாகாண சபையும் வழமை போன்று முள்ளிவாய்க்காலில் நினைவேந்தல் நிகழ்வை அனுஷ்டிப்பதற்குத் தயாராகி வருகின்றதே இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என வினாவினார்.

இதற்குப் பதிலளித்த சிவாஜிலிங்கம் வடமாகாண சபையின் ஏற்பாட்டிலேயே கடந்த மூன்று வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறுகிறது எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இது தொடர்பாகத் தற்போது என்னால் மேலதிக கருத்துக்கள் எதனையும் கூற முடியாது எனவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பாக ஆராய்வதற்கான கூட்டமொன்று நாளை திங்கட்கிழமை(07) வடமாகாண முதலமைச்சர் செயலகத்தில் வடமாகாண முதலமைச்சர் தலைமையில் இடம்பெறவுள்ளதாகவும், இந்தக் கூட்டத்தின் பின்னர் எடுக்கப்படவுள்ள தீர்மானங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.