அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் எச்சரிக்கை!

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இன்றும் கடும் மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

பிற்பகல் வேளையில், முகில்களுடனான காலநிலை நிலவக் கூடும் என காலநிலை அவதான நிலைய பணிப்பாளர் அதுல கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

 மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இதேவேளை, உடவளவை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் தொடர்ந்தும் திறந்த நிலையில் உள்ளன. இதன் காரணமாக நீர்தேகத்தின் தாழ்நிலப் பகுதியில் வாழும் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 அத்துடன், நிலவும் மழையுடனான காலநிலையினால் ஏற்படும் அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

 மண்சரிவு நிலைமைகள், நில வெடிப்பு, பாறை வீழ்வு மற்றும் மரம் முறிவு என்பன தொடர்பில், மலைநாட்டு மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

 குறித்த நிலைமைகள் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால், 117 என்ற தொடர்பு இலக்கத்துக்கு அழைத்து தகவல் வழங்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 இதேவேளை, களனி கங்கை, களு கங்கை, நில்வல கங்கைகளை அண்டி வாழும் மக்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

 அத்தனகல ஓய பகுதியின் ஜா-எல, கட்டான பகுதியைச் சேர்ந்த மக்களும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 அத்துடன், கிடைக்கும் தகவல்கள் தொடர்பில் அனைத்து மக்களும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 தங்களது முக்கியமான ஆவணங்கள், மருந்துகள், பணம், ஆபரணங்கள் உள்ளிட்ட முக்கிய பொருட்கள் அடங்கிய பொதியை தயார்ப்படுத்தி வைத்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அறிவித்தல்களுக்கு அமைய, குறுகிய காலத்திற்குள் பதிலளிக்கக்கூடிய வகையில் அனைத்து மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.